Thursday, 12 July 2012

 " ஆடி " - கழிவு மாதமா?

என் அன்புமகள் கமலாதேவிக்கு,

அன்று என்னிடம் நீ கேட்ட கேள்விகளுக்கு அப்பொழுதே பதில் கூறிவிட்டாலும்,(ஏன் இந்த மாதத்தில் எங்குபார்த்தாலும் திருமணக்காட்சிகளாகவே உள்ளன?) அக்கேள்விகளுக்கான விடைகள் இன்னும் முற்றுப்பெறாததைப் போலவே உணர்கிறேன். உன்னுடன் மீண்டும் அதுகுறித்து விரிவான விவாதமாகவும், தகவல் பரிமாற்றமாகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீயும், கடிதம் கிடைக்கப்பெற்று உன் நண்பர்களுடன் கருத்துக்களப் பகிர்ந்து கொள்வாய் என நம்புகிறேன். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத எந்த சமூகமும், பழமையின் எச்சங்களை இறுக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதோடு, வளர்ச்சியிலிருந்து தன்னைத்தானே தடுத்துக் கொள்ளவும் செய்கிறது. அதே சமயம் நமக்கு முன்பிருந்தது என்ன? என்று கூட தெரியாதபடி, திடீர் மாற்றத்திற்கான காரணத்தையும், அவசியத்தையும் மறைத்து விடுவதோடு சமூகத்தில் இது புதுக்குழப்பத்தையும், பொருந்தாத் தன்மையையும் உருவாக்கிவிடுகிறது. தேவையை மையப்படுத்தாத இம்மாற்றத்தினை நாம் வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ள இயலாது.

உடல் திசுக்களில் அதன் பெருக்கம் உடல் வளர்ச்சிக்கு அவசியமானது என்றாலும், திடீரென்று பல்கிப் பெருகும் திசு வளர்ச்சி உடல் கூறுக்கு தேவையற்றதாகவும், பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை விளவிக்கக் கூடிய பெரும் கேடாகவும் மாறுவதைப் போல, சமூக மாற்றமானதும் மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்றதாய் இருக்க வேண்டும்.  அத்தகைய மாற்றத்தையே நாம் அச்சமூகத்திற்கான வளர்ச்சி நிலையாக எடுத்துக் கொள்ள இயலும். திடீரென நாகரீகத்தின் பெயராலோ, மூட நம்பிக்கைகளின் பெயராலோ ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றங்கள், எந்த ஒரு சமூகத்திற்கும் நல்ல சீரான வளர்ச்சியைத் தந்து விடுமென்று கூறமுடியாது.

மக்கள் எப்பொழுதும் தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அத்தகைய மக்களக் கொண்ட சமூகமே நல்லவைகள ஏற்று அல்லவைகளத் தள்ளும் தகுதியுடையதாயிருக்கும்.

ஆடி மாதத்தைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது இத்தகைய போக்கை நான் உணர்ந்தேன். ஏன், எதற்கு, எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிக்காமல், வெறும்  வெளிப்புற ஆரவாரத்தை உள்வாங்கி மகிழ்ச்சியுறும் மக்களாலேயே இந்தத் தேவையற்ற சம்பிரதாயங்களும், சடங்குகளும் புற்றுநோயைப் போல வளர்ந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்றைய ஆடிமாதக் கழிவுக் கொண்டாட்டம்! ஆடித்தள்ளுபடி! மற்றும் அட்சய திருதியைகள் எல்லாம்...

சரி, இவை எந்த அளவிற்;கு மக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஆடி மாதம் சிறப்பான மாதமா? அல்லது நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று தள்ளி வைக்கப்பட்ட மாதமா? இந்தக் கேள்வியில் இருக்கும் முரண்பாடுதான் இன்றைய நடைமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதெனத் தடை செய்யும் போக்கு, மறுபுறம் பொருளாதார ரீதியான விற்பனைப் பெருக்கம், தள்ளுபடி விற்பனை.  இவ்வாறான முரண்பாடுகளுக்கிடையில் ஒரு மாதம் படும்பாடு...அதிசயமானதாய் இருக்கின்றது. அப்படியென்ன காரணம் கிடைத்தது மக்களுக்கு! ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதென்பதற்கு? மேலும், யார், எதற்கு, எப்போது முதல் இந்த ஆடிமாதத்தை நற்காரியங்கள் செய்யக்கூடாத மாதம் எனப் புறக்கணித்தார்கள்?

பொதுவாக ஆனி மாதத்திற்கு என்ன சிறப்பென்றால், அடுத்து ஆடி மாதம் துவங்கப்போகின்றது என்பது தான். ஆடி மாதம் துவங்கப் போகின்றது என்பதால் ஏறத்தாழ ஆனிக்குள் எவ்வளவு திருமணங்கள் முடிக்க முடியுமோ அவ்வளவு செய்து விடுகிறார்கள். ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த நல்ல காரியங்களும் நடத்துவது என்பது பழக்கத்தில் கிடையாது. ஆடி மாதம், மாதங்களில் கெட்ட மாதம் என்ற திடீர் பழக்கம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஆடி மாதத்தில், திருமணங்கள் பற்றி பேசுவது கூட கிடையாது. பேசினாலே அது தவறான காரியத்திற்கு ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். நல்ல காரியத்தை இம்மாத்தில் தொடங்கவே கூடாது. இது இன்றைய தமிழர் கலாச்சாரங்களில் ஒன்றாகவே வந்து விட்டது. சொந்த வீட்டிற்கொ அல்லது வாடகை வீட்டிற்கோ இந்த மாதத்தில் குடிபோகக் கூடாது!

“அப்படியென்றால் நீங்கள் மட்டும் ஏன் ஆடி மாதத்தில் நமது புது வீட்டிற்கு குடி வந்தீர்கள்” என்றாய்! உனக்குத் தெரியுமே, என் முடிவுகள் பற்றி! நல்லவைகளச் சிந்திக்கும் எல்லா நாட்களும், உழைக்கும் நாட்கள் எல்லா நாட்களும் நல்ல நாட்களே! உழைக்காமல் பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்தான் நல்ல நேரம், நல்ல நாள், நல்ல மாதம் எல்லாமே! எனக்கு எல்லா மாதமும் உழைக்கும் மாதம்தான். எனவே தான் நான் இதையெல்லாம் நம்புவது கிடையாது. “மேலும் ஆடிமாதம் கெட்ட மாதம் என்ற சிந்தனையும், பழக்கமும் சமீபத்தில் ஏற்பட்டதா?” இப்போது தான் ஆடி மாதத்தை தவிர்க்கின்றார்களா என்றால், இல்லை! ஆடி மாதத்தை நல்ல காரியங்களுக்காக தவிர்த்தது என்பது இன்று நேற்றல்ல, அது காலம் காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒரு நிகழ்வு. அன்று தவிர்த்ததற்கான காரணம் அறிவுப் பூர்வமானது. தேவையின்பாற்பட்டது. ஆனால் இன்று தவிர்ப்பது தேவையில்லாதது. பகுத்தறிவிற்குப் புறம்பானது. வெறும் சடங்காகி ஒரு மூடப்பழக்கமாகி, உழைக்கும் மக்களின் சிந்தனையை மழுங்கடித்து விட்டது பார்ப்பனீயம்.

ஆடி மாதம் பற்றிய பல செய்திகளை நாம் தெரிந்தாக வேண்டும். ஏன் தெரியுமா “ஆடிக்கழிவு” என்று நகைக்கடை, துணிக்கடை, பாத்திரக்கடை என அனைத்தும் ஆடி மாதத்தை “கழிவு” மாதமாக்கி விட்டது. ஆடி மாதம் குறித்த அரிய செய்திகளை நாம் தெரிந்தாக வேண்டியது அவசியமாகிறது. முதல் செய்தி, ஆடி மாதம் என்பது பார்ப்பனீயம் சித்தரிப்பது போல மோசமான மாதம் அல்ல. ‘புனிதமானது என்றும் நாம் சொல்லவில்லை!’ மற்ற மாதங்களுக்கு என்ன மதிப்பு உள்ளதோ அது தான் இதற்கும், அவ்வளவேதான் நம் வாதம். ஆனால் இது மோசமானது என்று சித்தரிக்கப்பட்டு வருவது முற்றிலும் தவறானதாகும். சிந்தித்துப்பார்த்தால் இதன் காரணம் புரியும். தமிழகத்தைப் பொருத்தவரை (சித்திரை முதல் பங்குனி வரை தமிழ்நாட்டில் உள்ள மாதங்கள். வேறு மாநிலங்களில் இந்த மாதங்கள் வழக்கத்தில் இல்லை) ஆடி மாதத்தில் இயன்ற வரை நல்ல காரியங்கள் செய்வதும் இல்லை, தொடங்குவதும் இல்லை. இதைப் பற்றித் தான் நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்வதற்கு நம் மூதாதையர்கள் தெரிவு செய்த மாதம் ஆடி (‘ஆடி பட்டம் தேடி விதை’ என்ற முதுமொழி இன்னமும் உண்டு) காய்கறித் தோட்டம் போடுபவன் கூட ஆடியில்தான் விதைக்கிறான். மறு முளைப்புத் திறன் கொண்ட விதைகள் உடைய பயிர்கள் எல்லாம் ஆடியில்தான் இன்னமும் பயிர் செய்யப்படுகின்றது. அப்படி மனிதனின் உணவுத் தேவையை உற்பத்தி செய்யத்துவங்கும் மாதம் ஆடியாக உள்ள போது அது எப்படி கெட்டமாதமாக இருக்க முடியும்? அடுத்தது, மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால் அறிவு பெற வேண்டும். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்றார் தந்தை பெரியார். உணவு மனிதனுக்கு எப்படி வாழ்வாதாரமாக உள்ளதோ அதைவிட, அவசியமானது அறிவு. அந்த அறிவு என்பதைக் கல்வியின் மூலம் பெறுகிறோம். அந்த கல்வியை கற்க நாம் தொடங்குவது ஆடி மாதத்தில் தான். ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு. விவசாயம் தொடங்குவதற்கு ஏதுவாக காவிரி ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்து வரும். புதுப்புனல் பெருக்கெடுத்து வருவது போல் அந்த நாளில் படிக்கத் தொடங்கினால் கல்வியும் பெருக்கெடுத்து வரும் என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். எனவே அந்த் தினத்தில் குழந்தைகளை இன்றும் கல்விக் கூடங்களில் சேர்க்கின்றார்கள். ஆடி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் தொடக்கப் பள்ளிக்கூடங்களில் இன்றும் கூட மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமை கூட வேலை நாளாகக் கருதப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து  வருகின்ற நிகழ்ச்சி. என்னை புதுக்கோட்டை காந்திநகர் பள்ளியில் என் தந்தை 1ம் வகுப்பில் சேர்த்து விட்டதே ஆடி 18ல் தான்.

தமிழ்நாடு, விவசாயத்தையே முழுமுதற் தொழிலாகவும், பொருளாதாரமாகவும் நம்பியிருக்கும் தேசம். அதற்கான புவியியல் அமைப்பும், விவசாயத்திற்கு சாதகமாகவே இருந்தது. அந்த விவசாயத்தை ஆடி மாதத்தில் துவங்கி விடுவதால் மக்கள் அனைவரும் முழுமையாக விவசாயத்திற்குள் தங்களப் பிணைத்துக் கொள்வார்கள். விவசாயத்தில் முழுமையாக ஈடுபடாத மேல்தட்டு வர்க்கம் கூடக் கீழ்நிலையில் உள்ள விவசாயிகளின் உடல் உழைப்பையே முழுமையாக நம்பி இருப்பதால், அவர்களும் ஆடி மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளயும் வைத்துக் கொள்வதில்லை. மேலும் அந்நாளய விவசாயம் என்பது, உழைப்பைப் பணமாகப் பெறாத காலம். அதாவது நமது வயலில் பத்து உழவு ஏர் தேவையென்றால், ஊரில் உள்ள இதர 10 வீட்டு ஏர்களும் நமக்கு வந்து உழுது கொடுப்பார்கள். கூலி கிடையாது, மாறாக அவர்கள் வீட்டு உழவுக்கு நமது வீட்டு ஏர் போகும். இப்படியேதான் அன்றைய விவசாயம் நடந்து வந்தது. நாற்று நட வீட்டுக்கு ஒருவர் அண்டை வீட்டாருக்குச் செல்வதும், அறுப்பதற்கும். அடிப்பதற்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் விவசாயம் செய்து வந்தனர். வாய்க்கால் வெட்டுவதாக இருந்தால் வீட்டுக்கு ஒருவர் மண்வெட்டியுடன் செல்ல வேண்டும். ‘கூலி முறை’ விவசாயம் வருவதற்கு முன்னால் இருந்த வந்த விவசாய முறை இது.
இப்படி இருந்த விவசாயிகள் காலப்போக்கில் ஆரியர்களின் வருகையினால், உழைக்கும் மக்களின் விவசாய நிலங்கள் அனைத்தையும் அதிகாரத்தினாலும்,  சூழ்ச்சிகளினாலும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கினர். இந்த மக்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். காடுகளயும், புதர்களயும் அழித்து விவசாய நிலமாக மாற்றி, உழுது பயிர் செய்து, ‘உறவு முறை’ விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள், நயவஞ்சகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால், தங்கள் உயிரினும் மேலாகப் பாதுகாத்து வந்த நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தனர். இறுதியில் நிலமற்ற கூலி விவசாயிகளாக மாற்றப்பட்ட இம்மக்கள், தங்களின் நிலத்திலேயே, பார்ப்பன நில உடைமையாளர்களுக்கு தினக்கூலிகளாக மாற்றப்பட்டனர். ‘உறவுமுறை விவசாயிகள்’ ‘கூலி விவசாயிகளாக’  இவ்வாறுதான் மாற்றப்பட்டனர். உறவுமுறை விவசாயம் இருந்தவரை விவசாயப்பணிகள் என்பது இம்மக்களிடம் தனித்தனியாக இல்லை, ஒன்றாகவே இருந்தது. எனவேதான் இவர்களால் இந்த ஆடி மாத காலத்தில் விவசாயம் தவிர்த்த எந்த நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்தனர். விவசாயிகளின் விழாக்கள் என்பது அந்த நாளில் இரண்டு தான். ஒன்று குடும்ப வைபவங்கள் மற்றது கோவில் திருவிழாக்கள். இப்போதும் கூட கோவில் திருவிழாக்கள் ஆடி மாதத்தில் எந்த கிராமத்திலும் நடைமுறையில் இல்லை.

ஆடி மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகள் அந்நாளில் ஒத்தி வைத்ததற்கு இது தான் காரணம். மேலும் இதற்குள்ளேயே மற்றொரு செய்தியும் அடங்கியுள்ளது. அந்நாளய கோவில் திருவிழாக்களாக இருந்தாலும், குடும்ப வைபவங்களாக இருந்தாலும் எப்படி நடைபெறும் தெரியுமா? உனக்கு இதை நான் சற்று விவரமாக கூறினால் தான் ஆடி மாதத்தில் நற்காரியங்களத் தவிர்த்ததற்கான காரணம் புரியும். அந்நாளய திருமணம் என்பது இப்போது நகரங்களில் நடைபெறும் ஒப்பந்த முறை ( contract ) திருமணம் போல் கிடையாது. இப்பொழுதெல்லாம் நகரத்துத் திருமணங்கள் அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் இருக்கின்றார்கள். பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது என்பது மட்டும் தான் பெற்றோர்கள் வேலை. அது கூட தற்போது திருமணத் தரகர்கள், இன்டர்நெட் என வந்துவிட்டது.

சென்னையில் அன்று ஒரு நாள் நானும் உன் அண்ணனும் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்டோம். மண்டபத்தின் உள்ளே சென்று அமர்ந்ததும், ஒரே மாதிரி சீருடை அணிந்த 10, 15 பெண்கள் செயற்கைச் சிரிப்புடன் தாம்பாளத்தில் குளிர்பானங்கள ஏந்தி வந்தனர். கூலிக்காக விருந்தினரை உபசரிக்கும் ஒரு இலக்கணம் இது. பந்தல் போடுவது, வாழை மரம், குருத்து கட்டுவது முதல் விருந்தினரை வரவேற்று சந்தனம், குங்குமம், குளிர்பானம் கொடுத்து, சோறு போட்டு, தாம்பூலம் கொடுத்து அனுப்புவது வரை கூலித் தரகர்கள் தான். பெண், மாப்பிள்ள வீட்டார்கள், சமீபகாலங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் வேலையைக் கூட ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்கின்றனர். வி..பி, வி.வி.ஐ.பி, தவிர மற்றவர்களுக்கு அழைப்பிதழ் கூட தபால் மற்றும் கூலி முகவர்கள் மூலம் தான்  கொடுக்கிறார்கள். அப்படியெனில் திருமண வீட்டாரின் பங்கு திருமணத்தில் என்ன என்கின்றாயா? ஒரே ஒரு வேலைதான், அந்த செலவுகளுக்கெல்லாம் பணப் பட்டுவாடா செய்வது தான். இன்றைய திருமணங்களில் எதுவும் உணர்வுபூர்வமாகவோ, உள்ளபூர்வமானதாகவோ இல்லவே இல்லை. அனைத்திலும் ஒரு செயற்கைத்தனமும், போலித்தனமும் கூடிய ஆடம்பரம் மட்டும் தான் எஞ்சி நிற்கின்றது.

இந்தச் செய்தியில் நீ மேலும் புரிந்து கொள்ள வேண்டியதும் இதுதான். அதாவது அன்றைய விழாக்கள் அனைத்திலும் பல்வேறு இனக்குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்ந்தாலும், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உறவு முறையிலும், நட்பு முறையிலும் நெருக்கமான பிணைப்பு இருந்தது. அந்நாளில் திருமணம் என்பது பெண்பார்க்க துவங்குவது முதல், திருமணம் முடிந்து அவர்கள் குடும்பமாக மாறும் வரை உறவினர்கள் உடனிருப்பார்கள். பெண்பார்க்கச் செல்வதற்கு நெருங்கிய உறவினர், ஊர் நாட்டாமை சகிதம் செல்ல வேண்டும். பேசி முடிப்பதற்கும் அதே போல் செல்வார்கள். திருமணத் தேதி வைப்பது முதல் சமையலுக்கு நெல் அவிப்பது வரை கூடிப்பேசியே முடிவு செய்யப்பட்டது. வீட்டுக்கு ஒரு நபர், பெண் அல்லது ஆண் நெல் அவித்து காய வைத்து நெல்லை குத்தி அரிசியாக்கி புடைத்துச் சுத்தம் செய்து மூட்டையாக கட்டி வைத்து விட்டுச்செல்வார்கள். அந்நாளில் நெல் அரைக்கும் மில்கள் கிடையாது. அதனால் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டனர். அது முடிந்த பிறகு திருமணத்திற்கு விறகு (மரம்) வெட்டுவார்கள். பிறகு அதை உடைத்து விறகாக மாற்றுவார்கள். இதற்கு வீட்டிற்கு ஒரு ஆண் செல்ல வேண்டும். இப்படியாக பாக்கு வைப்பது முதல் (அச்சு இயந்திரம், பத்திரிக்கைகள் இல்லாத காலங்களில் திருமணத்திற்கு அழைக்கும் முறை இது) பந்தல் போடுவது, வாழைமரம், தோரணம் கட்டுவது, சமையல் செய்வது, உறவு முறைகள் திருமணத்திற்கு வரும்போது வரவேற்பது, வழியனுப்புவது வரை எல்லா வேலைகளும் உறவினர்களால் பகிர்ந்தே செய்யப்பட்டது.

புதுமணத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் பேச வைப்பதற்கு ஒரு குழுவே செயல்பட்டு வந்த காலம் அது. பெண் தோழி, மாப்பிள்ளத் தோழன் என்றொரு அமைப்பே செயல்படும். திருமணமாணவர்கள் ஒருவருக்கொருவர் தாங்களாகவே பேசிக்கொள்வதற்கு ஒரு வாரம், 10 நாட்கள் என்றெல்லாம் கூட ஆகிவிடுவது உண்டு. அது வரை இந்த உறவுக்காரர்கள் தான் அவர்களைப் பேச வைப்பார்கள்.  இப்போது பெண்பார்க்க வரும்போதே பையனும், பெண்ணும் தனிமையில் பேசி கருத்து பரிமாறிக்கொள்கின்றனர். இது பெண், இது மாப்பிள்ள என்று முடிவாகிவிட்டால் போதும் எல்லா செல்போன் கம்பெனிகளும் தற்போது யுனயஅ கார்டுகள் விற்பனை செய்கின்றன. வாடகையைக் கட்டி 24 மணி நேரமும் இலவசமாக பேசிக் கொள்ளலாம், இது இப்போது. அந்நாளில் எல்லாமே மனித உழைப்புத்தான் ( man power ) திருமணம் முடிந்த பிறகு தம்பதிகளுக்கிடையிலும், பெண் கொடுத்து எடுத்தவர்களுக்கிடையிலும் உறவும், நட்புச் சுழலும் இரண்டு பக்கங்களிலும் வளர, நெருங்கிய உறவுக்காரர்கள் அறிமுகம் பெறுவதற்காக, மணமக்களுக்கு முதல் வழி, இரண்டாம் வழி, மூன்றாம் வழி என்ற  பெயரில் இங்கிருக்கின்ற உறவினர்கள் அங்கு செல்வதும், அங்கிருக்கின்ற உறவினர்கள் வட்டம் இங்கு வருவதும், இப்படியாக மாறி மாறி போய் வருவதன் மூலமாக குடும்ப உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன.

திருமணம் என்ற நிகழ்ச்சிகள் வரும்போது ஒரு கிராமத்தில், ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருமே இணைந்து செயல்பட்டு வந்தனர். இப்படி அனைத்து உறவினர்களும் நண்பர்களும் திருமண வேலைகளில் பங்கெடுத்து வந்ததனால்,  விவசாய துவக்க மாதமான ஆடியில் குடும்ப நிகழ்வுகளை நடத்தினால், விவசாய பணிகள் முற்றாகப் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக ஆடி மாதத்தில் விழாக்கள் நடத்துவதை அறிவுபூர்வமாகவும், சூழ்நிலைக் காரணங்களினாலும் தவிர்த்து வந்தனர் நம் முன்னோர்கள். தமிழகத்தில் இன்னமும் கூட பல கிராமங்களில் திருமண ஏற்பாடுகள் மேலே சொன்ன விதத்தில் தான் நடைபெற்று வருகின்றது. இப்போது புரிகின்றதா அன்று ஏன் ஆடி மாதத்தை தவிர்த்தார்கள் என்று. ஆனால் காலம் மாற, மாற மனிதனின் அறிவு என்பது சாத்திர, சம்பிரதாயங்களால் பார்ப்பனீயச் சிந்தனைகளால் பின்னோக்கியே செல்கின்றது. அதனால் தான் தேவை கருதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ளாததோடு, அறிவுக்கு தொடர்பற்ற வகையில் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று கூறி ஒரு மாதத்தையே கெட்ட மாதம் என்று மாற்றிவிட்டார்கள் பார்ப்பனப் புரட்டுப் புரோகிதர்கள்.

நிலப்பிரபுத்துவ அமைப்பு மாறி, தொழிற்புரட்சியும், நிர்வாகப் புரட்சிகளும் உருவாகி, விவசாயம் என்பது மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டும் செய்யும் தொழிலாக மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், அறிவாளியாக நின்று சிந்தித்தால், ஆடி மாதத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரியும். இன்றையக்கல்வியின் மூலம் படிப்பாளிகள் பெருகி விட்டார்கள். ஆனால் அறிவாளிகள் உருவாகவே இல்லை. உனக்கு ஒன்று சொல்லட்டுமா? ஒரு தேசத்தின் கலாச்சார சீரழிவிற்கும், பண்பாட்டுச் சீரழிவிற்கும் மூல காரணமானவர்களாக இருப்பவர்கள் யார்? படிப்பறிவில்லாதவர்களா? ஒரு போதும் இல்லை. பகுத்தறிவு என்பது துளியும் இல்லாத, படிப்பாளிகள் தான் எல்லா தேசத்திலும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் ஆபத்தானவர்கள்.

அத்தகைய படிப்பாளிகள் இங்கு மிகுதியாக இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது. ஆடி மாதம் அடுத்து வரவிருக்கின்றது. அந்த மாதத்தில் திருமணங்கள செய்யக் கூடாது என்பதால் அவசர அவசரமாக எங்கு பார்த்தாலும் ஆனி மாதத்தில் திருமணங்கள் ஊரெங்கும் நடந்தேறுகிறது. அதனால் தான் எங்கு பார்த்தாலும் நெருக்கடியான திருமணக் காட்சிகளாகத் தெரிகிறது. ஆனால் இந்த செயல்பாட்டிற்கு ஏதேனும் அர்த்தமுள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லை  என்ற பதில் தான் உண்மையானது. அன்றைய தேவைக்கும், அவசியத்திற்கும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டு வந்த நம் முன்னோர்களின் பழக்கங்கள இன்று ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்காமல் நமது சூழ்நிலைக்கு, ஏற்றார்போல் பின்பற்றாததின் விளவே இந்த தேவையற்ற நெருக்கடி நிலை! ஒரு மாதத்தின் 30 நாட்களும் கெட்டது என்று பதிவு செய்துவிட்ட நிலையும் ஆகும். இது வரலாற்றை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடும் எதிர் மாற்றம் இல்லையா? கண்மூடித்தனமாக கேள்வி கேட்காமலும் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமலும் செயல்படும் அடிப்படை அறிவில்லாத இந்நிலை நாகரீகத்தின் பின்னோக்கிய வளர்ச்சி என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? எதன் வழித்தோன்றல்கள் இவை? ஆரியம், பார்ப்பனீயம் என்ற ஆதிக்க சக்திகளின் ஆட்டுவிப்புத்தன்மையும், கடவுள், சமயம் என்ற பெயரால் கேள்வி கேட்கக் கூடாத நிலையை உருவாக்கி அதன் மூலம் தான் விரும்பும் எதையும் எதிர்ப்புகளின்றி சாதித்துக் கொள்ளும் தந்திரமும் தான் காரணம்.

அப்படியே இது கெட்ட மாதம் என்பதாகக் கொண்டால் இது கழிவு மாதம் என்றால் இதற்கு முன் வாங்கிய பொருட்கள் எல்லாம் இந்த மாதத்தில் விற்றுத் தீர்த்து விட்டுத்தானே புதுப் பொருட்கள அடுத்த வியாபாரத்திற்கு வாங்குகிறார்கள். ஆடிக்கழிவு என்று இந்த உழைக்கும் மக்கள்  ஏமாற்றி அவர்கள் தலையில் பழைய பொருட்கள கட்டிவிட்டு லாபம் சம்பாதிக்கின்றார்கள் வியாபாரிகள், அவர்களுக்கு இது கெட்ட மாதமா? இல்லையே! இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் கூட அமோகமான மாதமாக இருக்கும் போது மக்கள் ஏன் இதை புறக்கணிக்கத் துவங்குகிறார்கள்? ஒருபுறம் மூடத்தனமாக புறக்கணிப்பு, மறுபுறம் அதனையே கழிவு வியாபாரம் ஆக்கி லாபம் பெருக்கிக் கொண்ட வியாபாரத் தந்திரம். இரண்டுக்குமிடையே நமது பகுத்தறிவு என்ன செய்கிறது. எதைப் பகுத்துப்பார்த்து முடிவு செய்கிறது? சம்பிரதாயம், சடங்கு, சாஸ்திரம் எனற மாயைக்குள் நமது விஞ்ஞானிகளும் மாட்டிக்கொண்டு நல்ல நேரம் பார்த்துத்தான் செயற்கைக் கோளினை வான்வெளிக்கு அனுப்புகின்றார்கள்! அங்கேயும் பார்ப்பனீயம் தான் ஆதிக்கம் செய்கின்றது. 

அப்படியானால் நாம் மூளையற்றவர்களா? மூடர்களா? என்று நீ கேட்பது புரிகிறது. மூடர்களாக முட்டாள்களாக நாம் ஆக்கப்பட்டுவிட்டோம். இருபது நூற்றாண்டு கால அடிமைத்தனம் நம் மூளையை அழுக்கேற்றி வைத்துள்ள விதம், நம்மை இவ்விதம் ஆக்கிரமித்துள்ளது. இன்று நாம் எதையும் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டோம். இதனை மாற்றத்தான், நம் அறியாமையை உணர்ந்து அதனைப் போக்க முயன்றார்கள், அயோத்திதாச பண்டிதர், பாபாசாகேப் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார் போன்ற சிந்தனைவாதிகள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேள். உன் அறிவிற்கு அது சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள். நான் சொல்கிறேன் என்பதற்காக தலையாட்ட வேண்டாம் என்றார் தந்தை பெரியார். அவர் எத்தனை பெரிய மாமனிதர் என்று இப்போது உனக்குப் புரியும்.

இப்பொழுது உனக்குக் காரணம் புரியும், நாம் ஏன் ஆடி மாதத்தில் நமது புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தோம் என்று! இஸ்லாமிய சகோதரர்கள் இன்றும் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்கின்றார்கள். வளமையாகத் தான் வாழ்கின்றார்கள். ஒரே ஊரில் உள்ள மக்களின் ஒரு பிரிவினர் அதே நீரைப்பருகி, அதே காற்றைச் சுவாசித்து சுகமாக இருக்கும்போது, அதே ஊரில் உள்ள இன்னொரு பிரிவினருக்கு அதே மாதமும் நாளும் கெட்டதாக இருக்கின்றது என்றால் இங்கு இயற்கைச் சூழல் பாகுபாடு காண்பிக்கின்றதா? அல்லது மதங்களின் ஆளுமை மக்களின் செயல்களைக் கூறு போடுகின்றதா?

பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகாத எந்தச் செயலையும் ஏற்க மறுக்கவேண்டும். மூளைக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் முட்புதர்களை அழித்தொழிப்புச் செய்யவேண்டும்.

இதை ‘அபெகா பண்பாட்டு இயக்கம்’ தொடர்ந்து செய்யும். நீயும் உன் தோழர்களையும், அன்பான உன் கணவரையும் அழைத்துக்கொண்டுவா! இணைந்து பணியாற்றுவோம். 

என்றும் தோழமையுடன் உன் அப்பா.
                                                                                                             
                                                                                                        (நா.ஜெயராமன்)Thursday, 5 April 2012


மருத்துவர்கள் நியமனமும்
தமிழ்நாடு தேர்வாணையமும்


    தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் (T.N.P.S.C.) என்ற நிறுவனத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்குள் செல்ல முடியும் என்ற பொது நியதி ஒன்று நடைமுறையில் இருந்துவருகின்றது. இன்று TNPSC. அன்று MPSC (Madras Public Service Commission). இதையல்லாமல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் செயல்பட்டுவருகின்றது. தொழிற்கல்வி வேலை வாய்ப்பு அலுவலகப் பிரிவு சென்னையிலும் மதுரையிலும் செயல்படுகின்றது. (மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாய பட்டதாரிகள் போன்ற இவர்களுக்கென) இப்போதெல்லாம் இவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வைக்கலாம். இவர்களும் கூட மாவட்ட அளவில் அவ்வப்போது பணிநியமனம் செய்யப்படுகின்றார்கள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களை இன்றும் கூட ‘தினக்கூலி அடிப்படையில்’ வேலைக்கு அமர்தப்படுகின்றார்கள்.(?.உணவுக்கு வேலைத் திட்டம்)
இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளம், அவ்வளவு தான். இதற்குமேல் சம்பளம் கிடையாது, கேட்கவும் கூடாது. ஞாயிறு மட்டும் விடுமுறை தினம் அன்றைக்கு சம்பளம் கிடையாது. அரசு ஊழியருக்கான எந்த விதமான அகவிலைப்படி, பஞ்சப்படி, வீட்டுவாடகை, வருங்கால வைப்பு நிதி எதுவுமே கிடையாது. ஆனால் இவர் அரசு மருத்துவர். வேறு எந்தச் சலுகையையும் கேட்கக்கூடாது. ஒருபோதும் என்னை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் போகக் கூடாது. போக முடியாத அளவிற்கு சட்டங்களைச் சரியாக வகுத்து வைத்திருக்கின்றார்கள். Bondல் எழுதிக்கையெழுத்துப் பெற்றுக்கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தனியார் செங்கல் சூளைகளில், கல் உடைக்கும் இடங்களில் கஞ்சிக்காக வேலையமர்த்தப்பட்டுள்ளவர்களை “கொத்தடிமைகள்” என மீட்டுவரப்படும் செய்திகள் பத்திரிக்கைகளில் பார்க்கலாம். அவர்கள் கூட நயவஞ்சகமாக ஆசைகாட்டி அழைத்துசெல்லப்பட்டு மாட்டிக்கொண்டவர்கள். அவர்கள் எந்த விதப்பத்திரமும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காதவர்கள். முதலாளிகளிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே எந்த உரிமைகளையும் ‘கேட்க மாட்டேன்’ என்று பத்திரம் (Bond) எழுதிக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தில் பணிபுரிகின்ற ‘அரசுக்கொத்தடிமைகள்’ (Government Bonded labours) இவர்கள் தான்.
  தற்காலப் பணி என்றால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம். நிரந்தரப்பணி என்றால் தேர்வாணையம் என இருபிரிவுகளாகச் செயல்பட்டுவருகின்றது.

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவதன் நோக்கம் B.A. M.A. M.Com. M.B.A. போன்ற கலைப்படிப்புகள் படித்தவர்கள் அவர்களின் கல்வித்தகுதி மற்றும் திறனுக்கேற்ற வகையில் குரூப் I அல்லது II அல்லது III அல்லது IV என எதற்குத்தகுதி பெறுகின்றார்களோ அந்தப் பணிக்கு நியமனம் பெறுகின்றார்கள். நியமனம் கிடைக்கப் பெறாத மற்றவர்கள் ஏதோ ஒரு கிடைத்த தொழிலைச் செய்கின்றனர். மொத்தத்தில் அரசுப்பணிக்குள் செல்ல அவர்கள் தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றார்கள் B.E. முடித்த பட்டதாரிகள் அரசுப்பணிகளை தற்காலத்தில் விரும்புவது கிடையாது. பெரிய தனியார் நிறுவனங்களில் லட்சக்கனக்கான ஊதியம் பெறும் பணிகளுக்கு சென்றவர்கள்போக கூடுதல் வருவாய் கிடைக்காத, படிக்கும் போதே பணிக்கான தேர்வு கிடைக்காத (Campus selection) மற்றவர்கள் தான் அரசுப்பணியை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்புகின்றனர்.

அந்தப் பணிநியமனம் பெறுவதற்குக் கூட ‘இந்திய வாழ்நிலை விதிப்படி’ லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கவேண்டும்.

அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசுப்பணிகள் கிடைக்காதவர்கள் வேறு ஏதேனும் தொழில்கள் செய்து வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

இப்போதுள்ள புதிய சட்டத்தின்படி வழக்கறிஞருக்கு படித்துப்பட்டம் பெற்றபின் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் AIBE (ALL INDIA BAR COUNCIL EXAMINATION) என்ற பரீட்சையில் வெற்றி பெற்றால் தான் வழக்கறிஞர் அங்கி அணிந்து, நீதி மன்றத்தில் தனிவழக்கறிஞராக வக்காலத்து பதிவு செய்யமுடியும். தேர்வுபெறாதவர்கள், வழக்கறிஞராக வழக்காடவும், நீதிபதி தேர்வுகளில் தேர்வு எழுதவும் முடியாது. ஆனால் இந்த வழக்கறிஞர்கள் அனைவரும் படித்துமுடித்து பட்டம் பெற்றபின் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு பெற்றவர்கள்தான். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறாதவர்கள் சட்டப்படி வழக்கினை எடுத்து நடத்துவதற்கு தடைசெய்யப்பட்டவர்கள். இவர்கள் 1985ம் ஆண்டுவரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்த பின்னர் B.L. or  L.L.B. எனப்படித்து வந்தனர்.

1985 ஆண்டுக்குப்பிறகு இளங்கலை, முதுகலை என ஏதும் படிக்காமல் சட்டக்கல்வியை மட்டுமே ஐந்து ஆண்டுகள் படித்துவிட்டு, வழக்கறிஞர்களாக வெளியே வருகின்றார்கள். AIBE பரீட்சையில் தேர்வு பெறாதவர்கள் யார்? அந்தந்த மாநில அரசு நடத்திய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்து, அரசு நடத்திய தேர்வுகளை முழுமையாக எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள். அந்தக் கேள்வியும் பாடமும்கூட அவற்றைக்கற்றபின் வழக்கறிஞராக தொழில் செய்ய போதுமான அறிவு இருக்கின்றதா என்பதனை உறுதிசெய்து கொள்வதற்காக வைத்த தேர்வுகள். அதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெறாதவர், அந்த குறைந்த பட்ச அறிவினைப் பெறவில்லை என்பதால் தானே மீண்டும் வகுப்பு நடத்தி பரீட்சை வைத்து தேர்வு செய்யப்படுகின்றார்கள். நீங்கள் நடத்திய ஆய்வில் போதிய அறிவு அவர்களுக்குப் புகட்டப்படவில்லையா அல்லது தேவையான அறிவினைப் பெறும் வகையில் உங்கள் பாடத்திட்டமோ அல்லது பயிற்றுவித்தலோ இல்லை என்பதனால் தான், மீண்டும் ஒரு பரீட்சை தேவைப்படுகின்றதா?இதைவிட மிகப்பெரிய அறிவுள்ள பாடம் தான் AIBEல் இருக்கின்றது என்றால், அவர்கள் கையில் வைத்திருக்கின்ற பாடத்தைப் பெற்று இவர்களின் 5ஆண்டுகாலப் படிப்பில் அதையும் பாடமாகச் சேர்த்துவிடலாமே! 5 ஆண்டு கால அவகாசம் போதாது என்றால் இன்னும் ஓராண்டைக்கூட நீட்டிக்கலாமே!முறையாகப் படித்து, தமிழ் நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற வழக்கறிஞரை நீதிமன்றத்தில் வழக்காட முடியாது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? இந்த அரசாங்கம் சட்டம் படித்த ஒருவரை திட்டமிட்டு கிரிமினலாக மாற்றுகின்றது! இதைத் தவிர, இதில் வேறு என்ன நீதி இருக்கிறது?சட்டம் படித்த மேதைகளுக்கே இப்படியான சட்டங்களை இயற்றுவது எந்தப்பக்கம் செயலிழந்த மூளை? இந்த மூளைக்குப் பெயர்தான் இந்திய மையக்குவிமுக ஆட்சி (BUREAUCRACY OF INDIA)
“இந்தியாவில் கிராமப் புறத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22.42ம், நகர் புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65க்கும் மேல் அத்தியாவாசியத் தேவைக்கு செலவு செய்ய முடிகின்றவன் ஏழை கிடையாது, அவன் வறுமைக்கோட்டிற்குக் கீழே வரமாட்டான்”என்று நீண்ட ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த
இந்தியாவின் வறண்டுபோன மூளைதான் வழக்கறிஞர் படிப்பினைக் கொச்சைப்படுத்துகின்றது.

"நான்காவதுதூண்" என்று வருணிக்கப்படும் இந்தியாவின் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துகின்ற வழக்கறிஞர்களின் எதிர்காலம் மீட்பரே இல்லாமல், இந்த ஒருமுகமைய ஆட்சிக் கோட்பாட்டாளர்களின் (Bureaucrats) கைகளில் சிறை பட்டுக்கிடக்கின்றது!

இந்திய நீதி மன்றமே! உன்னை ஆட்டிப்படைப்பது யார்? நீதியா? நீதிபதியா?

இல்லை! இந்த வறண்டுபோன IAS அதிகாரிகள் மட்டுமே!

தேர்வாணையமும் மருத்துவர்களும்

ஏறத்தாழ 1983 வரை மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தார்கள். 1974ல் நான் மருத்துவக்கல்லூரியில் சேரும்போது, படிப்பு முடிந்த பின் அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 5ஆண்டுகள் பணிபுரிவேன் என்ற உறுதிமொழிப்பத்திரம் எழுதிக்கொடுத்து விட்டுத்தான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் படித்தவர்கள், பொதுமக்கள் சேவை செய்யவேண்டும் என்றிருந்த காலம் அது.

1984க்குப் பிறகு மருத்துவம், பல் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளை அரசு மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளப் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தமிழ் நாடு தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர முடியும்!

தற்போது கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வில் வெற்றிபெற வகுப்புகள் நடத்தப்படுவது போல், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள, சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றது. மருத்துவப் படிப்புக்கு இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?

மருத்துவ பட்டதாரிகள் எவ்வாறு எந்தத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றார்கள்?

அரசு நடத்தும் +2 பள்ளிக்கல்வி தேர்வில் ஏறத்தாழ 100க்கு 95 முதல் 100 வரை மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்க மருத்துவக்கல்வி ஆணையம் தெரிவு செய்கின்றது. அரசின் இதர வழிகாட்டுதல்களின் படி அதற்கு சற்று குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்கள் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

இவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியைத் தவிர வேறு எந்த விதமான பொதுப் பாடங்களும் நடத்தப்படுவது கிடையாது. ஒரு நோயாளியை முழுமையாகப் பரிசோதித்து தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை கொடுப்பது அல்லது இதற்கான சிகிச்சைக்கு இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவப் பிரிவுக்குச் சிறப்புச் சிகிச்சைக்குச் செல்லவேண்டும் என பரிந்துரைப்பது என்ற வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். செய்முறையும், பாடப்பிரிவுகளுமாக 5 ஆண்டுகள் முடித்த பின்பு, செய்முறையை மட்டும் பயிற்றுவிக்கும் பொருட்டு ஓராண்டுகாலம் உள்ளுறை மருத்துவராக (House surgeon) பணியாற்றிவிட்டு, தமிழ்நாடு மருத்துவ, பல் மருத்துவ கவுன்சிலில் படித்துப்பட்டம் பெற்ற சான்றிதழ்களைப் பதிவு செய்து, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்கான அரசு உரிமம் பெறுகின்றார்கள். இதைத்தான் ‘அரசு பதிவுபெற்ற மருத்துவர்’ என்று அழைக்கின்றோம்.

தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறாத மருத்துவனை உங்கள் மதிப்பீடு எந்த பிரிவில் (Category) வைத்திருக்கின்றது?

மருத்துவச்சேவை செய்யத் தகுதியற்றவன் என்ற இடத்திலா? அரசு மருத்துவமனையில் சேவை செய்யத் தகுதியற்றவன் என்று உங்களால் ஒதுக்கி வைக்கப்படுகின்றவன் தனியார் மருத்துவனாக இதே தேசத்து மக்களுக்குச் சேவை செய்து வருகின்றானே? எப்படி? அவன் தகுதியில் கோளாறா? இல்லை உங்கள் தேர்வில் கோளாறா?

1983ம் ஆண்டு வரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவசேவை செய்யவிரும்புவோர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியலாம். தனியாக மருத்துவமனை வைத்து மக்கள் சேவை செய்ய விரும்புவோர் அவர்கள் விரும்பம்போல செய்யலாம் என்றிருந்த போது, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கே இடமில்லை, மருத்துவனின் அறிவை மேலும் ஒரு அவசியமற்ற தேர்வு வைத்து ஆய்வு செய்த அசிங்கம் அப்போது இல்லை.
கொள்ளையடிப்பதற்காகவே தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து விட்டோம் அங்கெல்லாம் தரமில்லாத கல்வி போதிக்கப்படுகின்றது. எனவே தான் நாங்கள் ஒரு தேர்வினை நடத்துகிறோம், என்று இப்படி ஒரு தேர்வினை நடத்துகின்றீர்களா? அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் திறமையை சோதிப்பதற்குத் தேவையான கல்வி வழங்கப்படவில்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? அப்படியே அங்கு தரமில்லாத கல்வி போதிக்கப்படுகின்றது என்றால் அதைத்தானே சீர்படுத்த வேண்டும்? இல்லை இப்போது மருத்துவப்பட்டதாரிகள் எண்ணிக்கை பெருகிவிட்டது. அதனால் தான் இப்படிச் செய்து கழிக்கின்றோம் என்கிறீர்களா? அப்படியென்றால் தேவைக்குமேல் எதற்காக மருத்துவர்களை உற்பத்தி (Production) செய்கின்றீர்கள்? யாருக்காக உற்பத்தி செய்கின்றீர்கள்?

அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெறாதவர்கள்

1. திறமையற்றவர்களா? அல்லது
2. இன்னமும் பயிற்றுவிக்கப்படவேண்டியவர்களா?
3. நேற்றுவரை இந்திய மருத்துவக் கல்வி பயிற்றுவித்ததை ஓர் இரவில் தொலைத்து விட்டவர்களா?

அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்ள, இந்த தேசத்தின் உயர்குடிகளும்,அயல்நாடுகளில் வாழ்பவர்களும், பணப்பெருமுதலைகளும், ஒருமுகமையஆட்சிக்கோட்பாட்டாளர்களும், இந்தியாவை வழிநடத்திச் செல்கின்ற யோக்கிய அரசியல் தலைவர்களும், அரசு மருத்துவமனைகளில் வந்து வைத்தியம் பார்த்துக்கொள்கின்றதனாலும், சகல வசதிகளும் கொண்ட மேல் மட்டத்துக்காண மருத்துவமனையாகச் செயல்படுவதால், அதி நுன்னத திறமை பெற்றவர்களையெல்லாம் பொறுக்கி எடுத்து பணிசெய்ய வைத்துக்கொண்டு, தங்களால் திறமையற்றவர்களாகத் தயார் செய்யப்பட்டவர்களைத் தகுதியற்றவர்கள், என கழிவுகளாக்கி விடுகின்றீர்களா?

நீங்கள் நடத்துகின்ற தேர்வுகள் எந்த அளவிற்கு தரம் வாய்ந்தது என்பது சென்ற சில மாதங்களா பத்திரிக்கைகளில் நாறுவது மூச்சுத்திணர வைக்கின்றது. உங்கள் தேர்வுகளின் யோக்கியதை இவ்வளவுதான். காலம் காலமாக இதைத்தான் செய்தீர்கள் இன்று மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்

அரசு நடத்துகின்ற மருத்துவக்கல்லூரியில் படித்து, சில பாடங்களில் மெடல்களும் வாங்கிய பின் அரசு மருத்துவமனையில் சேர்ந்து அங்கு வரும் ஏழைமக்களுக்கு இலவசமாக என் கல்வியை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கக்தோடு பணி செய்ய உறுதிபூண்டிருந்த என்னை, பணம் பெற்றுக்கொண்டு நாணயமற்ற வகையில் சிலரைத் தேர்வு செய்ததனால் நான் உங்களின் ‘அறிவுத்தேடல் வளையத்திற்குள்’ வர முடியாதவனாகிவிட்டேன். 10 ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துமனையில் மருத்துவரைப்பார்க்க வழியில்லாத ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றார்கள்

ஒரு நாளைக்கு ரூ.22.42ம், ரூ.28.65ம் சம்பாதிக்க முடியாதவர்கள் இந்தியாவில்  40.2 கோடி பேர்கள் இருக்கின்றார்கள் என்று திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் அலுவாலியா சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த 40.2 கோடி மக்களுக்குத்தான் நான் சேவை செய்யவிரும்புகிறேன்.
உலக நாடுகளில் எல்லாம் மருத்துவர்களைப் பணி நியமனம் செய்யும் முன்பு மருத்துவ அறிவோடு, அந்த தேசத்து மக்களின் ‘பேசும் மொழி’ தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனையாக உள்ளது. ஏனெனில் அவன் வயிற்று வலி என்று கூறும்போது மருத்துவர் நெஞ்சுவலி என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதுதான் இந்த வழக்கு மொழியினை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம்.

மருத்துவனுக்கு என்ன தேவையோ அதை அவன் முழுமையாகத் தெரிந்திருந்தால் போதும். பொது அறிவு என்ற பெயரில் “Development of Indian Economy” என்பது போன்ற கேள்விகளுக்கு அவன் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? IAS வேலைக்கு தேவையானதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதை, மருத்துவனிடம் ஆய்வு செய்வது எதனால்? IED யும் MED யும் மருத்துவனுக்கு ஏன்? எதற்கு?

அவனுக்குச் சொல்லிக்கொடுத்த பாடத்திலேயே மீண்டும் ஒரு தேர்வு தேவையில்லை என்ற போது, மக்களுக்குச் செய்ய வேண்டிய மருத்துவ சேவையை இந்தக் கேள்விகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கின்றது?

AIBE தேர்வுமுடிவுக்குப் பின,; ‘தேறாதவர்கள்’ வழக்கறிஞர்களாக வக்காலத்து தாக்கல் செய்யமுடியாது என்பது போல், நீங்கள் வைக்கும் இந்த உலகிலேயே திறமையான தேர்வில் தேர்ச்சியுறாதவர்கள், பொது மக்களுக்குச் சேவை செய்யத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்க வேண்டியது தானே!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவிரும்புகிறவர்களுக்கு அறிவாளி மருத்துவனும், அரசு மருத்துவமனையை நிராகரிக்கின்றவர்களுக்கு உங்கள் தேர்வில் தேர்ச்சிபெறாத “திறமையற்றவர்கள்” வைத்தியம் செய்து ‘கொல்லலாம்’ என்பது தான் உங்கள் தேர்வின் முடிவா?

பொது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய என் அறிவையும் திறனையும் பொதுச்சேவை மனப்பான்மையையும் யோக்கியதையற்ற உங்கள் தேர்வு நிராகரிப்பது என்ன நியாயம்?

அரசு மருத்துவமனைக்கு அறிவாளிகளைத் தேர்வு செய்து விட்டு என் போன்ற திறமையற்ற (உங்கள் கணக்கில்) மருத்துவர்களைத் தேடி வந்து சிகிச்சைக்காகக் காத்துகிடக்கின்ற நீங்கள் அறிவாளிகளா? நீங்கள் அறிவாளிகள் என்று தெரிவு செய்த மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைகளில் நீங்கள் ஒரு நாள் வைத்தியம் பார்த்துக்கொண்டதுண்டா? ஏன் செல்வது இல்லை? உங்கள் தேர்வில், உண்மையிலேயே நீங்கள் யாரை வெளியேற்றுகிறீர்கள்?

M.A படித்துவிட்டு உங்களின் TNPSC, UPSC எழுதி, மிகத்திறமையுள்ளவன் IAS ஆகின்றான் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மாடு மேய்க்கக் கூடப் போகலாம் (அந்த மாடு மேயக்கும் ஆணையத்துக்குக் கூட நீங்கள் தான் துறைச்செயலாளர், அது வேறு விசயம்)

இந்தியாவின் Bureaucrats என்ற IAS களின் தேர்வுமுறை எப்படி? +2 தேர்வில் மதிப்பெண்கள் பெறுபவர்களில், மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், விவசாயம் என எந்த தொழிநுட்பப் படிப்புக்குச் செல்வதற்கு தகுதியற்றவர்கள், வேறு வழியின்றி B.A., B .Sc., B.Com., எனக் கலைக்கல்லூரிகளில் சேர்ந்து வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்ற மெக்காலே கல்வி பாடத்திட்டத்தைப் படித்துவிட்டு பட்டம் பெறுகின்றவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்துப் தேர்வு எழுதி, தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். கல்லூரிக்குச் செல்லாமல் தொலைதொடர்பு கல்வி பயின்றால்கூட போதும் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இரவு உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்த ஒருவர் IAS ஆகத் தேர்வு பெற்றார். குரூப் II  பரீட்சை எழுதி தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்துவர்களெல்லாம் கூடப் பதவி உயர்வு பெற்று IASஆக முடியும்.

IASபெறுவதற்கு தொழில் நுட்ப மூளையெல்லாம் தேவையில்லை.

உட்கார்ந்து படித்தால் ஓடுகின்ற ஓட்டத்தில் புரோட்டா மாஸ்டர் கூட IAS ஆகலாம். அவ்வளவுதான். IAS தேர்வுபெற்றவர்கள் எல்லாம்அறிவாளிகள் அல்ல என்பதல்ல என விவாதம். தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் இன்று IAS ஆகிக் கெண்டிருக்கின்றார்கள். அது முடியும். ஆனால் BAயும், MAயும் படித்துவிட்டு IAS ஆனவர்கள் ஒருபோதும் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆக முடியாது.

மருத்துவ சேவையை மக்களுக்கானதாக எடுத்துச் செல்லும் பணியினை மருத்துவம் பயின்றவர்கள் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். நில அளவையையும், வரிவசூல் செய்வதையும், ஆடு மாடு கணக்கெடுக்கும் ‘வேலையைச் செய்கின்றவர்கள் கைகளில் ஒப்படைத்தால் மருத்துவமனை எப்படி உருப்படும்?

TNPSC தேர்வில் முறையாகக் கல்வி பயின்ற மருத்துவரை தேர்வு செய்யாத போது, அவனது பட்டத்தை திரும்பப்பெற்றுக் கொண்டு மருத்துவத் தொழில் செய்ய அனுமதி கிடையாது என்று கூற உங்கள் நிர்வாகத்திற்கு திராணியிருக்கின்றதா? வழக்கறிஞர்களுக்கு ஒரு நியாயம்? மருத்துவர்களுக்கு ஒரு நியாயமா? MBBS., MS., MD., MCH., எனப் படித்த பட்டம் பெற்ற மருத்துவனுக்கு வைத்தியம் செய்ய ஒரு தேர்வு வைக்க வேண்டும் என்ற உங்கள் IAS மூளையின் எந்தப்பக்கம் செயல் இழந்து போய் உள்ளது என்று தெரியுமா?

அரசு மருத்துமனையில் சேர்ந்து (அங்குதான் ஏழை வருகின்றான்) மருத்துவ சேவை செய்ய விரும்புகின்றவர்களை எந்தத் தேர்வும் இன்றி பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையை விரும்பாத மருத்துவ வியாபாரிகள் வேண்டுமானால் உங்களுக்குச் சேவை செய்யட்டும்.

இந்தியா இன்னமும் முன்னேற்றமடையாமல் போவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை அய்ந்தாண்டுத் திட்டங்கள் வந்த பின்பும் இந்த தேசம் கீழ் நிலையிலேயே இருப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல, அவர்களையும் சேர்த்து இயக்கும், இந்தியாவின் சாபக்கேடான ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்கள் (Bureaucrats) என்று அழைக்கப்படும் IAS கள் தான்! இந்திய வங்கிகள் இன்னமும் வங்கித்துறை சார்ந்த வல்லுநர்கள் வசம் இருப்பதால் தான் அவைகள் லாபகரமாக இயங்குகின்றன. நும்ப IASகளுக்கு அதற்குள் இடமில்லை. தப்பித்துக்கொண்டது வங்கிகள்.

இராணுவம், மருத்துவம், பொறியியல், விவசாயம், கல்வி போன்ற உயிர்த்துடிப்பான அனைத்திலும் அந்தந்தத்துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் (Technocrats) கைகளுக்கு முழு நிர்வாக அதிகாரம் வரும்போது தான் இந்தியா வளம்பெறும். ஏனைய வளர்ந்த நாடுகளிலெல்லாம் இது போன்ற துறைகள் தொழில் நுட்ப வல்லுனர்களிடம் தான் உள்ளது.

Bureaucrats கைகளில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றது இந்தியா என்ற இந்தப் பரந்து விரிந்த தேசம்.

Sunday, 11 March 2012

“ மனநிலை சரியில்லாதவர்கள் ”


“ மனநிலை சரியில்லாதவர்கள் ”

7.3.2012 நாளிட்ட திருச்சி பதிப்பில் வெளிவந்த தினமணி நாளிதழில் 4வது பக்கத்தில் வெளியான செய்தியின் சுருக்கம், “4.3.2012 ஞாயிறு இரவு திருச்சியில் அரிஸ்டோ விடுதியின் முன்புள்ள பாபாசாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு. நள்ளிரவு 12 மணியளவில் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் பரமசிவம் (40) என்பவரை கண்காணிப்புக் கேமராவில் பதிவானவற்றை வைத்து கண்டறிந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் சாலைமறியல் செய்த பிறகு காவல் துறையின் நடவடிக்கை என்றும் அச்செய்தியில் உள்ளது.

இந்த செய்தியின் சிறப்பம்சம் தான் இக்கட்டுரை எழுதத் தேவையானதாக இருக்கின்றது. செய்தியின் கடைசி வரி என்ன சொல்கின்றது?

“அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகின்றது”.

எமது மூன்று கேள்விகள்:-

1. மனநிலை சரியில்லாதவரை கண்டுபிடித்து அவரின் தலையில் இந்த வழக்கினை பதிவு செய்து, ஆத்திரத்துடன் போராடியவர்களை திருப்தி செய்யும் காவல்துறையின் வழக்கமான திசைதிருப்பல் இது எனக்கொள்ளலாமா?

2. மறியல் செய்தவர்களையும் சமாதானப்படுத்தி, திட்டமிட்டு அவமதிப்புச் செய்தவனை மனநிலை சரியில்லாதவன் எனச் சான்றளித்து, தண்டனை கொடுத்துவிடக் கூடாது என்ற காவல்துறையின் வழக்கமான தலித் எதிர்வினையா?

3. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை அவமதிப்புக்;குள்ளாக்கும் குற்றவாளிகள் மட்டுமே எல்லாக்காலத்திலும் எல்லா ஊர்களிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பதேன்? காவல்துறை ஒப்பனை செய்யும் மனநிலை பாதிக்கப்பட்வர்கள் அப்படியே இருக்கட்டும், ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலைமட்டும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட சரியாக அடையாளம் தெரிகின்றது. அந்தச் சிலையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் ஏராளமான சிலைகள் இருந்தாலும் அவைகளெல்லாம் அவமதிக்கப்படக் கூடாது என்பது மட்டும் தெளிவாகப்புரிகின்ற மன நிலையில் தான் இன்றைய சாதி இந்துக்கள் இருக்கின்றார்கள். ஊருக்குள் மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ இஸ்லாமியர்கள் தெருக்களில் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை அவமதிக்கவேண்டும் என்று இது நாள் வரை தோன்றவில்லை?

மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு தன்னுடைய மதமும், தன் சாதியும், தான் தின்பது என்னவென்று மட்டும் தெரிகின்றது. அதோடு தன் சாதியின் எதிரியாரென்பதும் கூடத்தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. இது என்னடா வியாதி? இது ஒரு சமூகத்தின் வியாதியா? அல்லது தனிநபர் வியாதியா?

மன நோயாளிக்குக்கூட அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரக்கூடிய அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? உன் வயதிற்கு அவர் நிழலைக் கூடப்பார்த்திருக்க முடியாது. அவர் பேச்சுக்களை காதால் கேட்டிருக்க முடியாது அவர் எழுதிய நூல்களைத் தொட்டுக்கூடப்பார்த்திருக்க அறிவு வேண்டும். பின் ஏன் மனநிலை திரிந்த உங்களுக்கு அவர் மட்டும் அவமதிக்கப்பட வேண்டியவர் என்று புரிகின்றது?

அவர் வாழ்ந்த காலத்தில் உலகில் இருந்த ஆறு அறிஞர்களில் அவரும் ஒருவர். ஒருவேளை செத்தமாடு தூக்கவேண்டிய நபர் எதற்காக மேதையாக மாறினார் என்ற ஆற்றாமையா? இந்தச் செய்திகூட நான் இப்போது கூறிய பிறகுதான் உங்களுக்கே தெரியும்! எனவே அதற்காக நீங்கள் ‘உங்கள் தேசத்தின்’ கௌரவ மிக்க மரியாதையைச் செய்திருக்க வாய்ப்பில்லை! 

இந்தியாவில் அந்நாளில் இருந்த அனைத்து சமூக, அடிப்படைத் தொழிலாளர்களுக்கும் விடுதலை வேண்டும் என்பதற்காக ‘சுதந்திர தொழிலாளர் கட்சி’ என்ற அகில இந்திய கட்சியைத் தொடங்கி அனைத்துத் தொழிலாளர் நலனுக்காகவும் போராடினாரே! அதற்காகவா ‘உங்கள் தேசத்தின்’ கௌரவ மிக்க மரியாதையை அவருக்கு ‘மனநிலை திரிந்த நிலையிலும்’ செய்கின்றீர்கள்?

உங்களுக்கு இந்திய அரசியல் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அனைத்திந்திய தொழிலாளர்கள் நலனுக்காக அகில இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே தொழிலாளர்களையும் ஓரணியில் சேர்த்து அவர்களின் நலனுக்காகப் போராடினாரே அதற்காகத் தான் ‘உங்கள் தேசத்தின்’ உயரிய மரியாதையை அவருக்குச் செலுத்துகின்றீர்களா?

உங்களுக்கு தொழிற்சங்க வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை!

இந்த நூலகத்தில் உள்ள அதிகப்படியான நூல்களை வாசித்தவர் என்று அவரின் அறிவுத்திறனை வியந்து லண்டனில் உள்ள அருங்காட்சியக நூலகத்தின் நுழைவு வாயிலில் இவரது புகைப்படத்தை வைத்து அவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டார்களே! ஒருவேளை அந்தச் செய்தியை யாரேனும் உங்களுக்கு கூறிவிட்டார்களா? எனவேதான் “உங்கள் தேசத்தின்” பெருமைக்குரிய மரியாதையை அவ்வப்போது செலுத்துகிறீர்களா?

இதைத் தெரிந்துகொள்ள உலகஞானம் வேண்டும்! 

அகில உலக அளவில் தொழிலாளர்களுக்கென அரசியில் கட்சிகள் நடத்தும் இந்திய கம்யூனீஸ்டுகள் கூட (உலகமெல்லாம் உழைக்கும் மக்களுக்கு 8மணிநேர வேலை வேண்டும்மென்று போராடிக்கொண்டிருந்த போது) இந்தியாவில் 8மணிநேர வேலை வேண்டும் என்று போராடாத போது (பாண்டிச்சேரியில் ஆங்கிலோ பிரஞ்சு டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்கள் 8 மணிநேரம் வேலை கேட்டு நடத்திய பேரணியில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், 28-11-1945-ல் இந்தியாவில் ‘8’ மணிநேர வேலையை சட்டமாக்கித் தந்தாரே! அந்த நன்றி விசுவாசத்திற்காகவா அவருக்கு, ‘உங்கள் தேசம்’ உங்களுடைய மக்களின் புகழ்மிக்க மரியாதையைச் செலுத்துகிறீர்கள்?

இதற்கெல்லாம் கல்வி கற்றிருக்க வேண்டும்!

“இந்து சமூக அமைப்பில் பார்ப்பனனைத்தவிர, ஏனைய அனைத்துச்சாதியனரும் அவர்களுக்குச் சின்னச் சாதிதான். சத்திரியன், வைசியன் தவிர, ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் சூத்திரர்கள்தான். “சூத்திரன் என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன், வேசிமகன்கள். அவர்கள் அனைவரும் அவனுக்கு சூத்துக்கழுவிவிடுவது உட்பட அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் என்று மனுதர்மச்சட்டம் சொல்கின்றது” என்று தந்தைபெரியார் நாவறண்டுபோக ஊர் ஊராக பேசி உங்களையெல்லாம் மானமுள்ள மனிதர்களாக்கவேண்டும் என்றும் தன் உயிர் உள்ள வரை போராடினாரே! யாரையுமே தனக்குத்தலைவன் என்று கூறிக்கொள்ளாத தந்தை பெரியார் ‘டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தான் தன் தலைவர்’ என்று மாயவரம் மாநாட்டில் பறைசாற்றினாரே! அதற்காகத்தான் அவருக்கு ‘உங்கள் தேசத்தின்’ கொளரவத்தை இப்படி தெரிவிக்கிறீர்களா?

இதற்குப் பகுத்தறிவுவாதியாக இருக்கவேண்டும்.

இந்து சமூக்கட்டமைப்பில் இடைநிலைச்சாதிகள் அனைத்தும் பார்பனனுக்குத் தொண்டூழியம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, உங்கள் சமூக அவமானத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தில் உங்கள் சமூக அந்தஸ்த்து என்பது அரூவருக்கத்தக்க வகையில் இருக்கின்றது. இதை எதிர்த்து ‘நாம்’ போராட வேண்டும் என்று உங்களுக்காகக் குரல் கொடுத்த முதல் இந்தியராக இருந்தாரே! இந்துமதத்தில் உங்களின் இழிநிலை எவ்வாறு உள்ளது என்று உங்களுக்காகவே “ WHO WERE SUDRAS ” என்ற ஆராய்ச்சி நூலை, இன்றுவரை மறுக்க முடியாத ஆதாரங்களோடு ஆவணப்படுத்தினாரே அதற்காகத்தான் ‘உங்கள் தேசம்’ அடிக்கடி உங்களின் தரத்திற்கேற்ற வகையில் கௌரவப்படுத்துகிறது!

இதைக் கூட தெரிந்து கொள்ள கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும்.

உங்களுக்குக் கீழே ஒரு சாதிப்பிரிவினர் இருக்கின்றார்கள் என்ற போலியான மமதையில், தான் உயர்ந்த சாதியினர் என்று பெருமைப்பட்டுக்கொள்ள உங்களிடம் எதுவுமே இல்லை. இந்தியாவில் நீங்கள் மானமுள்ள மனிதர்களாக வாழ வேண்டும், மானத்தைவிட மனிதனுக்கு உயர்வானது ஏதும்இல்லை.அதுவும் பிறப்பின் அடிப்படையில் நீங்கள் இழிபிறவிகளாக இருக்கின்றீர்கள் என்று உங்களில் ஒருவர் கூட சிந்திக்காத போது, இந்த இழிவுகளிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்பதற்காக உங்களுக்காவே “ ANNIHILATION OF CASTE ” (சாதியை ஒழிக்கவழி) என்ற வரலாற்று நூலினை எழுதித்தந்துவிட்டுச் சென்றாரே! உங்களைக்கூட சகமானிடனாகப் அவர் பார்த்ததற்காகத்தான் ‘உங்கள் தேசம்’ அவருக்கு அவ்வப்போது நினைவு கூர்ந்து இவ்வளவு உயரிய மரியாதையைச் செய்கின்றதா?

இதற்கெல்லாம் மனிதப்பண்புகள் வேண்டும். 

அவர்செய்தனவற்றை பட்டியலிடுவதென்றால் மீண்டும் 400 பக்கத்திற்கு ஒரு நூல் எழுத வேண்டும்.

அந்நாளில், ஜனநாயகம் மலர்ந்திருந்த தேசங்கள் அனைத்திலும் உள்ள எழுதப்பட்ட அரசியல் சட்டங்களையெல்லாம் நுட்பமாகக் கற்றறிந்து அவை அனைத்தையும் தன் பேனாவில் மையாக நிரப்பிக்கொண்டு, இந்த நன்றிகெட்ட தேசத்திற்காக ஓயாது உழைத்து உடல் நலம் குன்றிய நிலையிலும் கூட ‘உங்கள் தேசத்திற்காக’ இன்றுவரை அசைக்கமுடியாத வலுவான ஒரு அரசியல் சட்டத்தை தனிமனிதனாக நின்று எழுதிக்கொடுத்தாரே! உலகமே அவரை ‘ FATHER OF INDIAN CONSTITUTION என்று வருணித்ததே! அந்த நன்றிக்காகத்தான் “உங்கள் தேசம்” இப்படியான தேசிய மாரியாதையைச் செலுத்துகிறதா?

இதற்கெல்லாம் மனித நாகரீகம் தெரிந்திருக்கவேண்டும்!

‘ MAN OF THE MILLENNIUM ’  

கொலம்பியா பல்கலைக்கழகம் தனது 250 ஆண்டுகால வரலாற்றில் தங்களுடைய பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுச் சென்ற மாணவர்கள், தங்களுடைய தேசங்களுக்கு சென்று ‘அங்கு வாழ்கின்ற மக்களுக்காக சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்’ யார் என்ற நீண்ட நெடிய ஆய்வினைச் செய்து, மொத்தம் 64 பேர்களைத் தெரிவு செய்தார்கள். அந்த 64 பேர்களில் பாபாசாகேப். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் முதலிடத்தில் இருக்கின்றார் என அறிவித்து, இவர் தான் ‘ MAN OF THE MILLENNIUM ’ என்று தங்கள் பல் கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டார்கள் மேலும் “உலகில் தோன்றிய ஆறு அறிவாளிகளில் (Six Brain) இவரும் ஒருவர். இந்தியாவில் இவர் மட்டும் தான்” என்ற ஆய்வும் நடத்தப்பட்டிருக்கின்றது.

(Ref:- 1. " UNTOUCHABLES TO DALIT "- BY ELEANOR ZELLET

2. Buddhist circle @yahoogroups.com

Cc . " Chakradhar Hadke ”

உலகமே அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் ‘உங்கள் தேசத்து’ எந்த ஊடகங்களும் வெளியிடாது. அரசியல் சமூகப்பண்பாட்டுத் தளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எந்தக்காலத்திலும் விடுதலைபெற்று விடக்கூடாது என தன் உயிரையே பணயமாக வைத்து அம்மக்களுக்கு எதிராகப் போராடியவர்களையெல்லாம் ‘உங்கள் தேசத்து’ ஊடகங்கள் பிதாமகர்களாகச் சித்தரிக்கின்றது. டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின், இந்தப் பெருமைகளையெல்லாம் உங்கள் தேசத்து மக்களுக்கு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவதால் அதையும் கடந்து நீங்கள் தெரிந்திருக்க அவசியமில்லை. எனவே அதற்காகவெல்லாம் ‘உங்கள் தேசம்’ அவ்வப்போது அவருக்கு மரியாதை செலுத்த வாய்ப்பில்லை!

நிச்சயமாக இதற்கெல்லாம் சில பண்புகூறுகள் இருக்கவேண்டும்

நீங்கள் உங்கள் தரத்தில் செலுத்தும் இந்த மரியாதை என்பது மேலே உள்ள காரணங்களாக இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

ஒருவேளை, இன்றும்கூட நம்ம ஊருக்குள்ளே பண்ணையடிப்பவனாகவும் நம்ம வீட்டில் செத்தமாட்டினை தூக்கிச் செல்பவனாகவும், நம்மவீட்டு எழவுக்கு தெருவில் நின்று தப்படிக்கிறவனாகவும், நம்ம வீட்டு நாற்றம் பிடித்த பொணத்தை எரிச்சு சாம்பலாக்குகிறவனின் மகன் இன்று டாக்டருக்கும,; என்ஜுனியருக்கும் படிச்சு நம்ம ஊர்லேயே கார்லே ஏறி வருகின்றானே, அதற்கெல்லாம் இந்த மனிதர்தானே காரணமாக இருக்கின்றார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் இந்த பள்ள, பறப்பயலுக்கும், சக்கிலிப்பயலுக்கும் செருப்பு மாலை போடமுடியாததால் இவன்களை வளர்த்துவிட்டதற்காக ‘நமது தேசத்தின்’ மரியாதையைச் செய்வோம் என்று செல்கின்றிர்களா?

இல்லை! அதெல்லாம் கூடக்கிடையாது என்றால்,

இன்றைய ‘உங்கள் தேசத்து’ அரசியல், சமூகம், பண்பாடு, வரலாறு என அனைத்தையுமே சாதியமாக நீங்கள் மாற்றிக்கொண்டுவிட்டீர்கள் , உங்கள் அரசியல், சாதி சங்கத்திற்கு ஏதாவது ஒரு தலைவன் வேண்டும், கல்யாணப் பத்திரிக்கையிலும், கல்யாண வீட்டு பேனர்களிலும், TVS 50 மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் படம் பொறித்துக்கொள்வதற்கும், காரின் பின்புறக் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளவும் ஒரு தலைவன் தேவைப்படுகின்றது. அப்படி நாம் அடையாளப்படுத்திக்கொள்ளும் தலைவன் கூட நமது தேச வரலாற்றில், நம்முன்னேற்றத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை, பெரிய படித்த மேதைகளாவும் இல்லை உலகம் போற்றும் சிந்தனையாளர்களாவும் இல்லை. எழுத்தாளர்களாகவும் இல்லை, உலக அரங்கில் கௌரவப்படுத்தப்பட்டவரும் கிடையாது. சாதனையாளரும் கிடையாது. இந்த நான்கு அல்லது அய்ந்து மாவட்டம் தாண்டிவிட்டால் நமது தேசத்தில் யாருக்கும் இவர்களைத் தெரியவில்லை, சட்டத்தை எழுதியவர்களாகவும் இல்லை. குறைந்த பட்சம் பெரிய படிப்புகள் கூடப் படித்தவர்களாகவும் இல்லை! தமிழ்நாட்டிலேயே  இன்னொரு  மூலையில் போய்க்கேட்டால் ஒருத்தருக்கும் இவர்களைத் தெரியவில்லை. நாம் உயர்ந்த சாதியாகவே இருக்கின்றோம். நமக்கெல்லாம் கிடைக்காத ஒருத்தர் இந்த நாலாந்தரச் சாதிப் பயல்களுக்குத் தலைவராகக் இருக்கின்றாரே! என்ற ஆத்திரத்தைத் தவிர வேறுஏதும் இல்லை. நம் நாகரீகத்திற்கும், கல்வியறிவுக்கும், நம்பண்பாட்டுக்கும் தெரிந்த ஒரே ஒரு உயர்ந்த மரியாதை இது தான் இதைச் செய்வோம் என்று அறுதியிட்டு விட்டதால் இதைச் செய்கின்றீர்கள்.

என்றுமே காவல்துறையினரால் கைது செய்யப்படுவர்கள் மனநிலை சரியில்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இங்கு,

‘அனைவருமே மனநிலை சரியில்லாதவர்கள்’.

பி.கு “இரண்டாம் தரக்குடிகளாக நடத்தப்படுபவர்கள் எந்த தேசத்தையும் தனது தேசம் எனக் கூறிக்கொள்ளமாட்டார்கள்” 


Sunday, 4 March 2012

"காந்தியின் தீண்டாமை" - மருத்துவர் நா.ஜெயராமன்

"தீண்டப்படாத வகுப்பு மக்களின் நண்பனாகத் திரு .காந்தி செயல்படாதது  மட்டுமன்று ,ஒரு நேர்மையான எதிரியாகவும் அவர் நடந்து கொள்ளவில்லை
                                                                                          "டாக்டர் .பி .ஆர் . அம்பேத்கர் .

எனது "காந்தியின் தீண்டாமை" நூலில் நான் எழுதியுள்ள முன்னுரை ........


‘மகாத்மா காந்தி’ என்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்குள் பிரவேசிக்கத் தொடங்கியது அனேகமாக எனது 5வது வயதில் எனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன். அது என் ஆரம்பக் கல்விக்காகப் பள்ளிக்குச் சென்ற வயது. நகராட்சிப் பள்ளியாக இருந்தபோதும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை காந்தியின் பஜனைப் பாடல்களைப் பாட வேண்டும். ஒரு மணி அடிப்பார்கள், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தபடி இரண்டு கைகளையும் கும்பிட்டபடி தலை தரையைத் தொடும்படி உட்கார்ந்து கொண்டு, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ தொடங்கி ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு காந்தியின் பாடல்களைப் பாடுவோம்.

1ம் வகுப்பில், வகுப்பு ஆசிரியர், தலைமையாசிரியர் தவிர பள்ளிக்குள் இருந்த ஒன்றிரண்டு ஆசிரியர்களை நான் அறிந்திருந்தேன். இந்த ஆசிரியர்கள் அல்லாத ஒரு உருவமும் பெயரும் என்னுள் இருந்தது. அதுதான் ஸ்ரீமான் காந்தி. அந்த பால்ய வயதிலேயே, என்னுள் புகுத்தப்பட்ட  முதலானவரும் அவரே. வகுப்புகளுக்குத் தவறாமல் வந்த ஒவ்வொரு மாணவனுக்கும் இது தான் நிலைமை. மேலும் நான் படித்த நகராட்சிப் பள்ளி இருந்த பகுதியும் காந்தி நகர். தலைமை ஆசிரியரின் நாற்காலிக்குப் பின்புறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்திற்குரியவராகவும், பஜனை செய்வதற்குரியவராகவும், பாடப் புத்தகங்களில் படிப்பதற்குரியவராகவும், சுதந்திர தினம், குடியரசு தினம், அவர் பிறந்த தினம் போன்ற நாட்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நடக்கும் இறைவணக்கக் கூட்டமாக இருந்தாலும், அனைத்திலும் பேசப்பட்ட, பேச வைக்கப்பட்ட ஒருவர் அவர்தான், பிறகுதான் நேரு மாமா!

இதன் விளைவாக 9, 10ம் வகுப்புகள் படிக்கும்போது, நான் இருந்த பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, காந்தி பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் நடத்திய நாட்கள் எல்லாம் இன்னமும் பசுமையாகவே நினைவில் இருக்கின்றன. காந்தி தாத்தாவாகவும், நேரு மாமாவாகவும் என்னுள் கருத்துருவாக்கப்பட்டது தான் இதற்கான மூலகாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த பாதிப்புகள் எனக்குள் மட்டும் அல்ல. ஏறத்தாழ என் வயது, அதற்கு மேலும் உள்ள வயதினருக்கும் கூட இதுதான் நிலைமை. இது உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அல்ல. உள்ளே திணிக்கப்பட்டது. இன்றைக்கும் கூட, இதுதான் இந்தியத் திணிப்பாக இருக்கின்றது. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரையும் இந்த அளவிற்குத் திட்டமிட்டுத் திணிக்கவில்லை!

1960களில் தொடங்கி 1974 வரை, ஆரம்பக்கல்வி முதல் மருத்துவக் கல்லூரி மாணவனான பிறகும் கூட, பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் என்ற ஒருவர் என்னுள் வரவேயில்லை. ஏப்ரல் 14, 1975-ம் ஆண்டு சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் என்னையும் டாக்டர்.ஜெயவேல் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்னை, நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வெளியே நின்ற, பிரமாண்டமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்கச் செய்தார்.

இடஒதுக்கீட்டில் இடம்பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்குவதற்கு முன்புவரை, எத்தனையோ முறை விண்ணப்பப் படிவங்களில் 18% இடஒதுக்கீட்டில், இடம்பெற விண்ணப்பித்திருக்கின்றேன். இடமும் பெற்றேன், ஆனால் அதுவரை கூட, இந்த இடஒதுக்கீடு கிடைக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டத்தை எனக்கும், என் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த, இந்த மாபெரும் புரட்சியாளரைப் பற்றி அறியாதிருந்தேன். என் போலவே, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான தலித்துகள் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் நான், என் பெற்றோர், என் சமூகத்தலைவர்கள் மட்டுமல்ல. நான் பயிற்றுவிக்கப்பட்ட கல்வி என்பது இப்படியாகத்தான் அன்று இருந்தது. இன்றும், இன்னமும் அப்படியே தான் இருக்கின்றது. சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பற்றி அவருக்குத் தெரிந்த செய்திகளையும், அவரின் சமூகவாழ்வு பற்றியும், அவருடைய கருத்துகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய தேவையையும் அடிக்கடி சொல்வார். அதுமட்டுமல்ல, எனக்குள் அதுவரை இருந்துவந்த ‘காந்தி என்ற மாய பிம்பத்தையும்’ முதன்முதலாக உடைத்தவரும் அவர்தான். ‘காந்தி நம் மக்களின் அரசியல் சமூக விடுதலையைக் கெடுத்த மோசமான பிற்போக்குவாதி, இம்மக்களுக்காக பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் போராடியதையும், ஸ்ரீமான் காந்தி அதற்கு நேர் எதிர் விதமாகச் செயல்பட்ட வரலாற்றுச் சம்பவங்களையும்’ சந்திக்கும் போதெல்லாம் எடுத்துரைப்பார்.

இதன் விளைவுகளாகத்தான் நான் பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் நூல்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஜோதிபாய் பூலே, அயோத்திதாசப்பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனுவாசன் போன்றவர்களின் நூல்களைப் படித்த போதும், சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங், ஊத்தம்சிங் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகளாலும், தந்தை பெரியார் காந்தியுடன் முரண்படும் இடங்களாலும், காந்தி மீது நான் அன்று கெண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம்கொஞ்சமாகச் சரியத் தொடங்கின. ஜவகர்லால் நேரு, எம்.ஓ.மத்தாய் மற்றும் Freedom at Midnight’ எழுதிய லேப்பியர் & காலின்ஸ் போன்றவர்களின் கருத்துக்களும் மாறுபட்டிருந்தன.

1934-ல் வியன்னாவில் இருந்து, சுபாஷ்சந்திரபோஸ் எழுதி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூலான ‘இந்தியப்போர்’ என்ற நூலைப் படித்தபோதுதான், காந்தியின் சுதந்திரப் போராட்டமே கேள்விக்குரியதாக இருந்தது. காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியர்களைக் கிரகிக்கும் ஓர் அபூர்வ சக்தி காந்திஜீயிடமிருக்கிறது. பிறிதொருநாட்டில் அவர் ஜனித்திருந்தால் அந்நாட்டில் அவர் முற்றுந்தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீகம் அவருக்கு ஆபத்துண்டாக்கியிருக்கும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அது இந்தியாவில் வேறுவிதம்...” (இந்தியப்போர் - பக்கம் 169) இந்தியாவின் ஒப்பற்ற விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸ் காந்தியைப் பற்றி, இவ்வாறு குறிப்பிட்டது, காந்தியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை என்னுள் ஏற்படுத்தியது. காந்தி அவர்களின் சுயசரிதையைப் படிக்கும்போது தான், தலித் மக்களின் சமூக விடுதலையில் இவரின் பங்கு என்னவாக இருந்தது என்பதை முழுமையாக அறிய முடிந்தது. காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to the untouchables) என்ற பாபா சாகேப் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் காந்தி குறித்த கருத்தரங்குகள் எங்கேயும், எப்போதும் நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் எல்லாம், பெரிய பேச்சாளர் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவருமே அதிக நேரம் பேசும் பகுதி, தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்களிப்பு பற்றியது தான். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிஜனங்கள் என பெயரிட்டு அவர்களையெல்லாம் கடவுளின் குழந்தைகளாக மாற்றினார். தீண்டாத மக்கள் இன்று கல்வியறிவு, அரசுப் பதவிகள் பெற்றுள்ளதற்கெல்லாம் காந்தியின் உழைப்புதான் காரணம். ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கப் போராடினார். அவர்களின் பேச்சுகளில் அத்தனையும் வரலாற்றுப் பொய்களாகவும், அலங்கார வார்த்தைகளுமாகத்தான் இருக்கும்.

புதுக்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக சங்கத்தினர் காந்தி பிறந்த நாளில் ‘அன்னியப்பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தவறுதலாக, என்னையும் அங்கு பேச அழைத்திருந்தார்கள். காலை வேளை மருந்துவப்பணிகளை முடித்துக்கொண்டு;, இரண்டு மணியளவில் பேசுவதற்காகச் சென்றேன். தலைவருக்குத் துணையாக நான்கு பேர்கள் துணைக்கிருந்தனர். திரைப்படப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. தலைவர் என் காதுக்கருகில் மெதுவாக, இப்போது உணவு இடைவேளை மாலை நான்கு மணியளவில் வந்து பேச முடியுமா? என்றார். நானும் சரி என்று விடைபெற்று மீண்டும் நான்கு மணியளவில் பேசச் சென்றேன் அப்போது என்னுடன் சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகமும் உடன் வந்திருந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்தவர், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு பற்றி ஏதும் பேசாமல் காந்தியின் பெருமைகளைப் பற்றியும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அடுத்ததாக நான் பேச அழைக்கப்பட்டேன். ஒரு சில தகவல்களை மட்டும் மேலோட்டமாகக் கூறினேன். தலைவரைத் தவிர மற்றவர்கள் கையைப் பிசைய ஆரம்பித்து விட்டனர். மதிய உணவு அருந்திவிட்டு உண்ணாவிரதப் பந்தலில் ஓய்வெடுத்தவர்களின் உறக்கம் கலைந்துவிட்டது. நான் பேச்சை முடித்துக் கொண்டால் போதும் என்ற அளவிற்கு சலசலப்பு ஏற்பட்டது. பேச்சை முடித்து விட்டேன்.

மருத்துவமனைக்குத் திரும்பும் வழியில் அண்ணாச்சி வள்ளிநாயகம், “தீண்டாமையை காந்தி ஒழித்தார், காந்தி ஒழித்தார்” என்றே பேசுகிறார்களே, ‘நீங்கள் ஏன் தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் காந்தியின் சூழ்ச்சிகளைப் பற்றி ஒரு நூல் எழுதக்கூடாது என்றார். இந்தத் தலைப்பில் நூல் எழுதவேண்டும் என்று என்னை முதன் முதலில் உற்சாகப்படுத்தியவர் அண்ணாச்சிதான். நானும் யோசித்துப் பார்த்தேன். நான் படித்த காந்திநகர் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கியமன்ற விழாப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, ‘தீண்டாமையை ஒழிக்கக் காந்தி பாடுபட்டார்,’

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிசனங்கள் எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்,’ ‘தீண்டத்தகாதவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்’ என்றெல்லாம் அன்று பேசி முதல் பரிசு பெற்றதெல்லாம் எனக்குள் வேடிக்கையாகத் தோன்றியது. அன்று நான் பேசி முதல் பரிசு பெற்றதற்கும், இன்று இவர்கள் பேசுவதற்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை, இரண்டும் ஒன்று தான்.

நான் தெளிவு பெற எனக்குள் ஒரு சமூகத் தேவை இருந்தது. காந்தியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக வைத்துக்கொள்ள வேண்டுமென்பவர்கள் மெத்தப்படித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இந்து மதத்தைப் புனிதப்படுத்த வேண்டுமென்பதற்காத் தீண்டத்தகாத மக்களுக்கெதிராகக காந்தி நடத்திய சூழ்ச்சிகளையும், நயவஞ்சகங்களையும், துரோகத்தனத்தையும் எந்தவித சமரசமுமின்றி அம்பலப்படுத்த வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு தீண்டத்தகாதவர்களைத் தான் ஒழித்துக்கட்டினார் என்ற உண்மைகளையெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மேல்மட்ட அதிகாரிகள் இன்றும் கூட மனிதநேய வார விழாக்களும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு, தீண்டாமையை காந்தி ஒழித்தார் என பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் பேசுகின்றனர். பேசுகிறவர்களுக்கு வெட்கமில்லை கேட்கின்றவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. இந்த அதிகார வர்க்கங்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரையும் தெரியாது. காந்தியையும் தெரியாது. மிச்சசொச்சம் உள்ள இந்தத் தலைமுறைக்குக் காந்தியின் உண்மை முகத்தைக் காண்பிக்க வேண்டும் என எண்ணியிருந்த வேளையில், 2005-06ம் ஆண்டில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், டாக்டர்.அம்பேத்கர் முதுகலைப் பட்டயப்படிப்பில்(P.G.DAS) சேர்ந்து, ‘காந்தி – தலித் விடுதலையின் விரோதி’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துப் பட்டமும் பெற்றேன். இந்தக் கட்டுரையை இன்னும் விரிவாக்கம் செய்து நூலாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

அவர்கள் கேட்டதற்கும், நான் இசைந்ததற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் தெளிவுபட உள்ளன.

இறந்து 59 ஆண்டுகள் முடிந்த பிறகும் கூட எதற்காக அவர் விவாதிக்கப்பட வேண்டும்? இறந்ததற்குப் பிறகு புகழ் பாடுவது அல்லது அவர்களது நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்வது என்பது மரபாக இருந்தும் கூட, ஏன் இந்த முயற்சி? ஒரு சிறு பிரிவு மக்களைத் தவிர இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களும் காந்தி என்ற பெயரை புனிதமானதாக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கின்றனர். அவரே மகான், அவரே மகாத்மா என்றும், புத்தர், ஏசு வரிசையில் அவரைச் சேர்த்து, அவரை அருள் பாலிப்பவராக மாற்ற வேண்டும் என்பதற்காக, அவர்கள் வரிசையில் இவரைச் சேர்த்து, அவர்களை மறைமுகமாகக் கீழிறக்கியதை மட்டும் சாதித்து வரும் இவருடைய அடிவருடிகளுக்கு இடையில், இதை ஒருபணியாகச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? உலக அரங்கில் இவரே அனைத்தும் என்றும், மார்க்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய எழுத்தாளர்கள் ‘இந்து மதம்’ உன்னதமானது என்று வரைந்துதள்ளியது போல், காந்தியும் மகாபுருஷன் என்று அளந்து விடப்பட்டார். சமீபத்திய, ஆகஸ்ட் 2009 தேதியிட்ட ‘தீராநதி’ என்ற தமிழ் சஞ்சிகையில் வந்த ஒரு செய்தி என்னை அதிர வைத்ததும் கூட இந்த வெளீயிட்டைக் கொண்டுவரக் காரணமாயிருந்தது. அதாவது, யுனெஸ்கோ நிறுவனம் ‘1947’-ல் வெளியிட்டிருக்கும்’ கல்வி குறித்த சிந்தனையாளர்கள் (THINKERS OF EDUCATION) புத்தகத் தொகைப்பில், உலகின் பெரும் புகழ்பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்புய+சியஸ், கிரேக்கத்தின் பிளேட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் காந்தி, தாகூர், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.

டாக்டர். மால்கம் ஆதிசேஷையா, தாகூர் தவிர மற்ற மூவருக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு? மற்ற மூவரும் ஆன்மிகவாதிகள். பிளேட்டோ, பிராய்டு வரிசையில் வருமளவிற்கு காந்தி கல்வியாளரா? இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? அல்லது கன்பூசியஸ், கிராம்ஸி அளவிற்குக் காந்தி கல்விச் சிந்தனையாளரா? எதுவுமே இல்லாத ஒருவரை உயர்த்துவதற்கு என்ன காரணம்?

அந்தக் காலங்களில் இந்தியாவில் கல்வி என்பது ஒரு சாதியினருக்குச் சொந்தமானதாக இருந்தது. மற்றவர்கள் அந்தக் கல்வியைக் கற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தனர். ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வந்தது. அதையும் கடந்து கல்வி கற்க வந்தவர்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். காந்தி பிறந்த போர்பந்தருக்கு அருகில் உள்ள ‘கவித்தா’ என்ற கிராமத்துத் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியதால், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் பலமுறை மண்ணெண்ணெய் ஊற்றிக் குடிநீரை விஷமாக்கினார்கள். இறுதியில் அந்த மக்கள் ஊரைவிட்டு நாடோடிகளாக விரட்டப்பட்டனர். இதுவும் காந்தியின் கண்முன்னே, அவரின் ஆசீர்வாதத்தோடு தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் நடந்தது. சாதிக்கு ஒரு கல்வி, சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு தொழில் என்று வர்ணம் இன்றும் கோலோச்சுகிற காலத்தில், கல்வி கற்பதனாலும், அதன் மூலம் சமூகப் பொருளாதாரம் உயர்வதனால் மட்டும்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பது பொது நியதியாகவும், மாற்றாகவும் கற்றவர்களால் கணக்கிடப்படுகின்றது. ஆதிக்க சாதியினரைத் தவிர மற்ற தீண்டாதவர்கள் (அன்று 6 கோடி) கல்வி கற்பதற்குத் தடையாயிருந்த தத்துவம் வர்ணம். வர்ணம் தான் அனைத்து இழிவுகளுக்கும், வன்கொடுமைக்கும் காரணமாயிருந்தது, இருக்கின்றது. வர்ணம் ஒழியாத வரை தீண்டாமை ஒழியாது. அந்த வருணம் குறித்து காந்தியின் செயல்திட்டம் என்ன?

வருணத்தை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க காந்தி என்ன செய்தார்? காந்தி கல்வியாளர் என்றால் அனைவரும் கல்வி கற்கத் தடையாயிருக்கும் வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஸ்ரீமான் காந்தி வருணத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றார் எப்படி? ‘வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. ஆகர்ஷண விதியை நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த விதி இருந்தது போல் வர்ணமும் என்றென்றும் இருந்து கொண்டும் இயங்கிக் கொண்டுமிருக்கின்றது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததனால் தான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள்ளது. மேலும், மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் காரணமாயிருக்கின்றது’ என்று எச்சரிக்கின்றார். மேலும் ‘அந்த வர்ண விதிகளுக்கு மாறாக நடப்பதால், அவர் தனக்குத்தானே கேடு விளைவித்துக் கொண்டு, இழிநிலையை அடைகிறார். மேலும் பதராகி விடுகின்றார்’ என்று விவரிக்கின்றார். வர்ணம் ஒரு மனிதருக்கு – என்ன தொழிலை விதித்துள்ளதோ அந்தத் தொழிலைத்தான் அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன் தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை.ஆனால் இன்று ஒரு தச்சரின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில், பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக்க எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கின்றார். (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு -7, பக்கம்89,90,91)

வர்ணம் விதித்த தொழில்களுக்கு ஏற்ப ஒருவன் தன் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். தச்சனின் மகன் நூறு ஆண்டுகளுக்கு முன் தச்சனாக இருந்தது போல் இன்னும் தச்சனாகவே இருக்க வேண்டும். வர்ணம் நிர்ணயித்த அந்தக் குலத்தொழிலை விட்டு, இன்று வக்கீலாக வேண்டும் என்று ஒருவன் விருப்பப்பட்டால், அவன் பணம் திருடுவதற்கு இந்தத் தொழிலை மாற்றிக்கொள்கின்றான், என்கிறார்.

மருத்துவனாக மாற விரும்பினால் அவனைத் திருடன் என்கிறார்! பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தேசத்தைக் கல்வி தானே சீர்படுத்தும்! லெனின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபோது சோவியத் ரஷ்யாவில் படித்தவர்கள் எண்ணிக்கை 2%. தோழர் அந்தன் மொகரங்கோவிடம், கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பினைக் கொடுத்தபோது, லெனின் வேண்டிக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். ரஷ்யாவில் உள்ள மக்கள் நூறு சதவீதம் கல்வி கற்றவர்களாக மாற்றப்பட வேண்டும் என்பது தான். பத்தே ஆண்டுகளில் 2 சதவீதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கையை 98 சதவீதமாக மாற்றிக் காண்பித்தாரே! லெனின் கல்வியாளர். ஆனால் இவர் குலத்தொழிலை விட்டுவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்கிறார்!

இவரைப்போய் உலகில் தோன்றிய கல்வியாளர்கள் பட்டியலில் இடம் பெயரச் செய்துள்ளனரே! இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு காந்தி தான் குரு, குலக்கல்வித் திட்டம்தான் இந்தியாவைச் சமூகப் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றும் என்றும் கூறுபவர் கல்விமானா?

அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்து இத்தனை ஆண்டுகளான பின்பும் கூட ‘மகாத்மா’ என்ற புளித்த ஏப்பம் விடுவதையே, வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ளவர்கள் மத்தியில் எனது தேடல் வேறுவிதமாக இருந்தது. காந்தியின் ‘அரசியல்’ பற்றிய விமர்சனங்கள், அவர் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, பகத்சிங் மரணத்தில் ‘வஞ்சக நாடகமாடியது’ தொடர்பாக வந்த விமர்சனங்களே இன்று வரைக்கும் ஆவணமாக உள்ளது. அதற்குள் போகத் தேவையில்லை. பொருளாதாரம் குறித்த அவரது பார்வையில் அவர் காலத்தில் வாழ்ந்த 35 கோடி இந்தியர்களுக்குமான எந்தச் செயல் திட்டமும் இல்லை. 35கோடி 110 கோடியாக உயர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமளவிற்கு அவரிடம் பொருளாதார ஞானமும் பொருளாதாரம் குறித்த அடிப்படைச் சிந்தனையும் இல்லை. தொலைநோக்கு அறிவும் இல்லை. அடுத்ததாக ‘இந்தியாவின் தொழுநோயான’ தீண்டாமையைப் போக்குவதற்குப் பதிலாக, சாதியக் கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் கோர முகத்திரையை பாபா சா கேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ‘காந்தியும், காங்கிரஸ_ம் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?’ (What Gandhi and Congress have done to the untouchables?) என்ற நூலில் கிழித்துக் காண்பித்துள்ளார்).

இந்திய அரசியல்வாதிகளும், வரலாற்றுப் புரட்டர்களும் அவரைக் கடவுள் நிலைக்குக் கூட உயர்த்திப் பிடித்துக் கொள்ளட்டும். ஆனால் நான் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றேன். மற்றவர்களுக்கு அவர் மகாத்மாவாக இருந்துவிட்டுப் போகட்டும். இந்தியாவில் அன்று 6 கோடியாக இருந்த தலித் மக்கள் இன்று 30 கோடிக்கு மேலாக உள்ள இவர்களின், சமூக, பொருளாதார வாழ்நிலை என்பது இந்து மதத்தில் உள்ள நான்கு வருணத்தாரால் முடக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நன்கு அறிந்தவர் காந்தி. அம்மக்களின் அரசியல் சமூக விடுதலைக்காக, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமைகளைக் ‘கீழ்த்தரமான சாகசத்தின்’ மூலம் அம்மக்களுக்குச் சென்றடையவிடாமல் தடுத்தவரை நான் எப்படி மகாத்மாவாக ஏற்றுக் கொள்ள முடியும்? நல்லவர் என்பவர் அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஆதாயம் தேடிக் கொடுத்ததால், நல்லவர் என்று அவர்களால் போற்றப்படலாம். ஆனால் எனக்கும், என் சமூகத்திற்கும் கேடு விளைவித்த, வஞ்சகர் ஒருவரை எப்படி நான் மகானாக ஏற்க முடியும்? என் உயிரின் வாதையை என்னால் தான் உணர முடியும். என் மீது திணிக்கப்பட்ட அவமானத்தின் அருவருப்பை என்னால் தான் அறிய முடியும்! எனக்கும் என் சமூகத்திற்கும் திட்டமிட்டுத் தீங்கிழைத்தவர்களை நான் எப்படி சக மனிதனாகப் பார்க்க முடியும்?

இன்னமும் கூட, இந்தியாவில் தலித் மக்கள் வாழ்கின்ற பெரும்பான்மைக்குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயர் ‘காந்தி நகர்!’ - இது அவமானப் பெயர் அல்லவா? எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எழுப்பப்பட்ட பெயரல்லவா? “நல்ல நிலம் உருவாக வேண்டுமெனில், அங்குள்ள தேவையற்ற முட்புதர்களை அழித்தாக வேண்டும” என்று கூறிய உலகின் முதல் அழித்தொழிப்பாளரான புத்தரை, பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சற்றுக் காலதாமதமாக (24.9.1932 – க்குப்பின்) உள் வாங்கிவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது.

காந்தி பிறப்பதற்கு முன், இந்தியாவில் ஒரு வேளை நால்வருண அமைப்பு இல்லாதிருந்தால், காந்தியே நால்வருண அமைப்பை உருவாக்கியிருப்பார் அல்லது இந்து அல்லாத ஒரு சமுதாயத்தைப் பற்றிப் பேசியிருந்தால் அவரே அந்தச் சமூகத்திற்கு நால்வருண சமூகக் கட்டமைப்பின் சிருஷ்டிகர்த்தாவாக இருந்திருப்பார் என்ற வாதத்தை ஆச்சார்ய வினோபா பாவே பின்வருமாறு வைக்கின்றார். “காந்தி வேறு தேசத்தில் பிறந்து வளர்ந்;திருந்தால் அல்லது வேறு ஒரு சமூகத்தை நோக்கிப் பேசியிருந்தால், வர்ணாசிரம தர்மம் என்ற வார்த்தையும், அதன் உட்கருத்தும் அவருக்குச் சுயமாகவே உருவாகியிருக்கும் ……………….., இதே பாஷையில் இல்லாவிட்டாலும்;@ வேறு எவ்வாறேனும் இதன் அடிப்படைக் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்”. (கிஷோர்லால்.க.மஷ்ரூவாலா எழுதிய ‘காந்தியும், காரல் மார்க்சும் என்ற நூலின் முன்னுரையில், பக்கம்.30)

முடை நாற்றமடிக்கும் இந்து மதத் தத்துவங்களுக்கு இப்படியெல்லாம் கூட வியாக்கியானம் செய்ய அந்நாளில் காந்தியைச் சுற்றி ஒரு மாபெரும் கூட்டமே இருந்தது. மாமேதை காரல் மார்க்ஸோடு, காந்தியின் பொருளாதாரத்தை ஒப்பிடக்கூடிய அசம்பாவிதங்கள் எல்லாம் கூட அரங்கேறியிருக்கின்றன என்றால் எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்திருப்பார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாம். காந்தி, ஊதி ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றம்.

பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட பார்ப்பனியத்திற்கு அவர்கள் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதைப் போலவே, தீண்டத்தகாத மக்களாக்கப்பட்ட தலித்துகளுக்கு, காந்தியின் தலித் விரோத, நால்வருணச் சிந்தனைகள் இன்னும் கூட ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. “புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள்” என்கிற புரட்சிகர வாசகம் ஒன்று உண்டு. ஆனால் பார்த்தீனியம் விதைக்கப்படுவதில்லை. ஒரு மூல விதை போதும். காந்தி என்ற ஒரு பார்த்தீனியம் பல பார்த்தீனியச் செடிகளை உருவாக்கிவிட்டது.

காந்தியவாதிகளாலும், நுனிப்புல் மேயும் சில படித்த மேல்தட்டு வர்க்க தலித்துகளாலும், ஆதிக்க சாதியினராலும் காந்தி புகழப்படுவதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை. தீண்டாமை, பார்ப்பனீயம் போன்றவை குறித்து, அவ்வப்போது அவர் திருவாய் மலர்ந்து பல செய்திகளைக் கூறியிருக்கின்றார். சாதிவெறி பிடித்த இந்துக்களுக்கு ‘காந்தியே’ தீண்டாமை குறித்து இவ்வளவு பேசியிருக்கின்றார். அப்புறம் என்ன? இது போதாதா! ‘தீண்டாமை பாவம்’, ‘தீண்டாமை இரக்கமற்ற செயல்’ என்று சொல்லிவிட்டார். எனவே இவர்தான் இந்தியாவில் தீண்டாமையை ஒழித்துக் கட்டிய தீராதிதீரர். தீண்டமைக் கொடுமை நீங்கி இந்து மதம் புனிதமாகி விட்டது. எனவே இந்துமதத்தை விட்டு தலித்துகள் வெளியேறத் தேவையில்லை. ‘தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் காந்தி தான்’ என்று அவரது துதிபாடிகள் புகழந்து திரிகின்றனர். ‘இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நானே தலைவர்’ என்று (இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், காந்தி தன்னை இவ்வாறுதான் பிரிட்டிஷ் பிரதமர் மாக்சே ராம் டொனால்டு முன்பு அறிவித்துக் கொண்டார்) அவரே பிரகடனம் செய்து, பின் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டு அவமானப்பட்டுப் போனார்.

தீண்டாமை, வர்ணம் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “வர்ணத்திற்கு நான் சொல்லும் பொருளில் மேலோர் கீழோர் என்னும் வேற்றுமைக்கு இடமே இல்லை”. (யங் இந்தியா 20.10.27)

“என்; அபிப்ராயத்தில் பரம்பரையாய் அல்லது சுயமாய் அடைந்த உயர்நிலை என்பதே இல்லை…….. எல்லோரும் பிறக்கையில் சமமாகவே பிறக்கினறனர்.

பிறப்பினாலோ பின் அடைந்த ஞானத்தினாலோ பிராமணர் தங்களை மேல்சாதியார் என அழைத்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் நான் அவர்களை எதிர்த்திருக்கின்றேன். இன்னொரு மனிதனை விடத் தான் உயர்ந்தவனாகக் கருதுவது மனிதத்தன்மையற்ற செயல் என்பது என் கருத்து………… ஆகையால் பிராமணனிடமோ, வேறு எவனிடமோ இந்த உயர் சாதிப்பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதான் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன். உயர்ந்தவனென்று தன்னைக் கருதுவோன், தான் மனிதனாய்க் கருதப்படுவதற்குள்ள உரிமையை இழந்து விடுகின்றான் என்பது என் அபிப்ராயம்” (யங் இந்தியா 29.9.1927)

இந்து மதம், நால் வருணத் தத்துவம் பற்றி என்ன கூறுகிறது என்று வலுக்கட்டாயமாகவே, ஜெயேந்திர சரஸ்வதியிடம் விவாதம் செய்துவிட்டு அவமானப்பட்டு வந்தார். லோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920-ல் காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு, தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையை தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (தனஞ்செய் கீர் எழுதிய ‘லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம்.442). நால் வருணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்க்கே இதுதான் மரியாதை. பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை. இதுதான் இந்துமதம். இதற்குப் பிறகும் கூட ‘வருணத்திற்கு’ இவர் பொழிப்புரை எழுதுவது இந்து மதம் பற்றிய அடிப்படை அறிவு, அறவே கிடையாது என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை!

‘தீண்டாமை, இரக்கமற்ற செயல்’ என்பதைச் சொல்ல ‘மகாத்மா’ தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் தெருக்குழந்தை கூட தீண்டாமையின் கொடுமையைப் பார்த்துக் காறித் துப்பும். இவர் என்ன இரக்கப்படுவது! இவரின் இரக்கம், வெண்மணியில் வெந்த எம் குழந்தைகளின் மயிருக்குக் கூட உதவாது. தீண்டாமையின் இழிவினை அவமானத்தை 24 மணிநேரமும் நேருக்கு நேர் எதிர் கொள்பவனுக்குத் தான் அதன் வேதனை என்னவென்று உணர முடியும்!

அடுத்ததாக இவர் சொல்கின்றார்: “உயர் சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதவன் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன்”…….

தெற்கே, மாபெரும் இயக்கப் போராளி தந்தை பெரியார் பிராமணனை நேருக்கு நேர் எதிர்த்தபோது, இவரும் இவரோடு குல்லாப் போட்டுக் கொhண்டிருந்த கூட்டமும் எத்தனைமுறை பெரியாரோடு இணைந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? அல்லது பெரியாரைப் பற்றியும் அவரது இயக்கம் தமிழ் நாட்டில் நடத்திய போராட்டங்களும் இவருக்குத் தெரியாமல் போய்விட்டதா?

வடக்கே வாழும் ஆத்மாக்களுக்குத் ‘தெற்கே’ ஒரு நிலப்பரப்பும், அங்கு மக்களும் வாழ்கின்றார்கள் என்பதும் கூட தெரியாமல் போய்விடும். இந்த ‘பரமாத்மாக்கள் தான்’ என்றுமே ‘இந்திய தேசியம்’ பேசுவார்கள். போகட்டும். ஆனால் வடக்கே பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற மாபெரும் புரட்சியாளர், இந்தியாவின் பார்ப்பனர்களைப் புரட்டிப் புரட்டிப் போட்டு அவர்களின் வருணாசிரமத்தையும், புராண, இதிகாசப் புரட்டுகளையும் ‘சௌதார் குளக்கரையில்’ குழிதோண்டிப் புதைத்தாரே! அது கூடவா இவர் காதுகளுக்கு எட்டாமல் போய்விட்டது? பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரோடு இவரும், இவரது காங்கிரஸ{க் கூடாரமும் எத்னை பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தின? அப்போதெல்லாம் இவர் எங்கே போயிருந்தார்? எத்தனை போராட்டகங்களை இவரே முன்நின்று நடத்தினார்? இதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான சான்றுகள் உண்டா? ஒரு ‘மகாத்மா’ பேசியதற்கும் அது செயல்பட்டதற்கும், ஏதேனும் தொடர்பு உண்டா?

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, தொலைநோக்குச் சிந்தனையில்லாத, நேரத்திற்கு ஏற்றாற்போல் பைத்தியக்காரத்தனமன அறிக்கைகளை வெளியிடுவதும், யாரேனும் கேள்வி கேட்டால் அன்று சொன்னதை விட்டு விடுங்கள், இன்று சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நேற்று உளறியதற்கு விளக்கம் கூறி வந்ததை மற்ற அரை வேக்காட்டுத்தனமான அறிக்கைகளோடு வைத்துக் கொண்டிருக்க வேண்டியது தானே! நால் வருணத்தின் கொடூரத்தைப் பற்றி இவர் ஏன் இப்படி அபத்தமாகப் புதுப்புது வியாக்கியானங்கள் செய்ய வேண்டும்?

அன்றைய தேதியில் 35கோடி மக்கட்தொகையும், மிகப்பெரிய நிலப்பரப்பும் கொண்ட தேசம் அன்னியராட்சியில் சுரண்டப்பட்டு வந்த காலத்தில் (அவர்கள் சுரண்டுவதற்காகவே, பல திட்டங்கள் தீட்டினாலும்) மக்களின் அடிப்படைத் தேவையான போக்குவரத்திற்கு ரயில்களும், ஆரோக்கியத்திற்கு மருத்துமனைகளையும் கட்டிவந்ததை, இந்த தேசத்திற்குச் சுதந்திரம் வேண்டும் என்று தலைமையேற்று நடத்திவந்த ‘சுதந்திரப் போராட்ட வீரர்’ கூறுகிறார்….. “ரயில்வேக்களும், ஆஸ்பத்திரிகளும் இயல்பாக அழிவதை நான் நிச்சயம் வரவேற்பேன், என்றாலும் அவற்றை நாசம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உயர்ந்த பரிசுத்தமான ஒரு நாகரீகத்துக்கு ரயில்வேக்களோ, ஆஸ்பத்திரிகளோ சான்றாகாது. அவை அத்தியாவசியமான ஒரு தீமையாக இருக்கின்றன என்பது தான் அவை பற்றி கூறக்கூடிய சிறப்புரையாகும்”. (யங் இந்தியா 26.1.1921) புத்தகம் - காந்தியன் தொகுப்புகள். பகுதி-6)

இதுபோன்ற ‘அறிவார்ந்த’ கருத்துகளைக் கூறி வந்த சிந்தனைக் கடலின் ஒப்பற்ற அறிக்கைகளை அவருடைய துதிபாடிகள் வேண்டுமானால், பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இவரின் ‘கருத்துகளும்’ ‘செயல்பாடுகளும்’ தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் ‘பிடுங்கி எறிந்தது’ என்ற வரலாற்றுப் பொய்யை நாம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?

காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை? என்று எந்த தலித்தும் எந்தக் காலத்திலும் கேள்வி எழுப்பியது இல்லை, அது தேவையும் இல்லை. எம் மக்களின் பிரச்சனைகளுக்குப் போராட எமக்கென்று தலைமை இருக்கின்றது. ஊலக வரலாற்றில் அடிமைகளின் எசமானர்கள் ஒருபோதும் தலைமையேற்றது கிடையாது. எமக்கு விடுதலை வாங்கித் தருவதாக வஞ்சகம் பேசி, எம் மக்களின் விடுதலை வேட்கையை நீர்த்துப் போகச் செய்த தலைவர்கள் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கின்றது. எமது விடுதலைக்காகப் போராடிய எமது ஒப்பற்ற தலைவர்களின் பணிகளை, எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களிடம் எம் தலைவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை ஏற்கச் செய்த சாகசங்கள் எல்லாம் வழிநெடுக ஏராளமாகப் பரவிக் கிடக்கின்றன.

இன்றைய இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். இவர்களின் உடல் உழைப்பு என்பது ஆப்பிரிக்க தேசத்து நீக்ரோக்களைவிட வலிமையானது. ‘உழவுத் தொழிலை நிந்தனை செய்தவர்கள்’, உழவர்களான இவர்களையும் நிந்தனை செய்தார்கள். அனைத்துத் தொழில்களையும் இவர்களே செய்யும்படி நிந்திக்கப்பட்டார்கள். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகப் பழகிப்போன இவர்களின் வாழ்க்கை முறை இன்னமும் இதுவாகத்தான் இருந்து வருகின்றது. இவர்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை உயர்நிலையை எட்ட முடியாததாக உள்ளது. இம்மக்கள் இன்னமும் இறந்த தங்களின் உறவினர்களைத் தூக்கிச் செல்வதற்கான பாதைகளுக்காகவும், புதைப்பதற்கான இடங்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் 22 ஆயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளை முறை அமலில் இருந்து வருவதாகப் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

பௌத்தம் கோலோச்சிய காலங்களில் இவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் தர்க்க நிலைகள் வெகுவாகச் சிறப்புற்றிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் செழுமையாக உள்ளன. பூர்வ பௌத்தர்களான இவர்கள், பார்ப்பனியத்தால் சிதறடிக்கப்பட்டு, திருநிலையற்றவர்களாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள். பார்ப்பனியம் வெற்றி பெற்று, இவர்கள் இந்துக்களாக்கப்பட்டனர். மீண்டும் நால்வர்ணப் படிநிலை சமூகம் வந்த பின்பு இவர்கள் இந்து மதத்தின் பின் இணைப்பாகக் கருதப்படுகின்ற பஞ்சமர்கள் என்ற வர்க்கமாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தொடர்ந்து இம்மக்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தனர். கல்வி கற்கும் வாய்ப்பு தொடர்ந்து திட்டமிட்டே மறுக்கப்பட்டு வந்ததால், இவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வு பெற முடியாமலேயே இருந்து வந்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால்பதிக்கத் துவங்கிய பிறகுதான், இவர்களுக்குக் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைச் சிந்திப்பதற்கான சூழல் ஏற்பட்டது. ஜோதிபாய் பூலே என்ற சமூகச் சிந்தனையாளர் இம்மக்களின் சமூகப் பொருளாதார, அரசியல் மேம்பட்டிற்காகச் சிந்திக்கத் தொடங்கினார். காலத்திற்கேற்ற வகையில் இவர்கள் தங்கள் பகங்களிப்பினைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

1891 ஏப்ரல் 14-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் ஒன்றான மகர் இனத்தில் பிறந்த பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் விடியலுக்கு நிரந்தரத் தீர்வை ஆங்கிலேயர்களிடம் போராடிப் பெற்றார். ‘என் சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும்’ என்று உழைத்த அந்தப் புரட்சியாளரின் கனவை, காந்தி என்ற இந்துமத வெறியர் தன் நயவஞ்சகப் போராட்டத்தினால் கிடைக்க விடாமல் தடுத்தார்.

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான குஜராத்தில், போர்பந்தர் என்னும் ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாகப் பாதுகாத்து வந்த ‘பணியா’ என்ற ஆதிக்க சாதியில், 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி, திவான் கரம்சந்த் காந்தியின் மகனாகப் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவரே இந்திய விடுதலைப் போரின் நாயகராகப் பின்னாளில் பிரகடனப்படுத்தப்பட்டார். இந்தியாவின் பார்ப்பன, பணியா கும்பலின் அரசியல் விடுதலைக்காக, (ஆட்சி மாற்றத்திற்காக) ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சாத்வீகப் போராட்டம் நடத்தினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்காக பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போராடினார். ஆதிக்க சாதியினால் தொடர்ந்து சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 17-8-1932 அன்று கூடிய பிரிட்டிஷ் பாராளுமன்றம் விடுதலை அளித்தது. பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வேண்டி விரும்பிய அரசியல் அதிகாரத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கான ‘சுதந்திரப் பிரகடனம்’ அது. இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய எம்.கே.காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார உயர்விற்காக அவர்கள் போராடிப் பெற்ற அரசியல் விடுதலையை சாகும்வரை உண்ணவிரதம் என்ற கபட நாடகத்தின் மூலம் தட்டிப் பறித்தார். புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நயவஞ்சகமாகக் குள்ளநரி பறித்துக்கொண்டது.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்காகக் குள்ளநரி ஒன்று போராடியதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அது உழைத்ததாகவும் இந்திய வரலாற்றைத் தலைகீழாக மாற்றித் தவறாக எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதப்பட்ட வரலாற்றை உலக மக்களுக்கு இன்று வரை அது போதித்து வருகிறது. இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, இந்து மதமும், இந்து சனாதனிகளான பார்ப்பனிய, பணியா கும்பல்களும், இந்த மக்களைக் காந்தியின் விசுவாசிகளாகவும் மாறியுள்ளனர்.

இந்து வெறியரான, தலித்தின மக்களின் நயவஞ்சக துரோகியான காந்தி என்பவர் இம்மக்களின் ‘ஆபத்பாந்தவர் அல்ல’ என்ற வரலாற்று உண்மைகளை காந்தி வாழ்ந்த காலத்திலேயே அம்பலப்படுத்தினார் மாமேதை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்தப் பசுத்தோல் போர்த்திய புலி எவ்வாறு தலித் விரோதப் போக்கை தலித் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டது என்பதை அனைத்து மக்களிடமும் ஆய்வுக்குக் கொண்டு செல்லும் நோக்குடனேயே ‘காந்தியின் தீண்டாமை’ – என்ற இத்தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு திறந்த வாசிப்புக்கும், பொது விவாதத்திற்கும் உங்களை அழைக்கிறேன்.

தோழமையுடன்,
மருத்துவர். நா.ஜெயராமன்
‘அபெகா’ பண்பாட்டு இயக்கம்
(அம்பேத்கர் பெரியார் காரல் மார்க்ஸ்)
இரண்டாம் தளம்,
832, கீழ ராஜ வீதி, புதுக்கோட்டை – 622 001.
தொலைபேசி எண்: 04322 – 220061, 232126.
E.mail : drnjayaraman@yahoo.com