Thursday 5 April 2012


மருத்துவர்கள் நியமனமும்
தமிழ்நாடு தேர்வாணையமும்


    தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் (T.N.P.S.C.) என்ற நிறுவனத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்குள் செல்ல முடியும் என்ற பொது நியதி ஒன்று நடைமுறையில் இருந்துவருகின்றது. இன்று TNPSC. அன்று MPSC (Madras Public Service Commission). இதையல்லாமல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் செயல்பட்டுவருகின்றது. தொழிற்கல்வி வேலை வாய்ப்பு அலுவலகப் பிரிவு சென்னையிலும் மதுரையிலும் செயல்படுகின்றது. (மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாய பட்டதாரிகள் போன்ற இவர்களுக்கென) இப்போதெல்லாம் இவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வைக்கலாம். இவர்களும் கூட மாவட்ட அளவில் அவ்வப்போது பணிநியமனம் செய்யப்படுகின்றார்கள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களை இன்றும் கூட ‘தினக்கூலி அடிப்படையில்’ வேலைக்கு அமர்தப்படுகின்றார்கள்.(?.உணவுக்கு வேலைத் திட்டம்)
இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளம், அவ்வளவு தான். இதற்குமேல் சம்பளம் கிடையாது, கேட்கவும் கூடாது. ஞாயிறு மட்டும் விடுமுறை தினம் அன்றைக்கு சம்பளம் கிடையாது. அரசு ஊழியருக்கான எந்த விதமான அகவிலைப்படி, பஞ்சப்படி, வீட்டுவாடகை, வருங்கால வைப்பு நிதி எதுவுமே கிடையாது. ஆனால் இவர் அரசு மருத்துவர். வேறு எந்தச் சலுகையையும் கேட்கக்கூடாது. ஒருபோதும் என்னை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் போகக் கூடாது. போக முடியாத அளவிற்கு சட்டங்களைச் சரியாக வகுத்து வைத்திருக்கின்றார்கள். Bondல் எழுதிக்கையெழுத்துப் பெற்றுக்கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தனியார் செங்கல் சூளைகளில், கல் உடைக்கும் இடங்களில் கஞ்சிக்காக வேலையமர்த்தப்பட்டுள்ளவர்களை “கொத்தடிமைகள்” என மீட்டுவரப்படும் செய்திகள் பத்திரிக்கைகளில் பார்க்கலாம். அவர்கள் கூட நயவஞ்சகமாக ஆசைகாட்டி அழைத்துசெல்லப்பட்டு மாட்டிக்கொண்டவர்கள். அவர்கள் எந்த விதப்பத்திரமும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காதவர்கள். முதலாளிகளிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே எந்த உரிமைகளையும் ‘கேட்க மாட்டேன்’ என்று பத்திரம் (Bond) எழுதிக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தில் பணிபுரிகின்ற ‘அரசுக்கொத்தடிமைகள்’ (Government Bonded labours) இவர்கள் தான்.
  தற்காலப் பணி என்றால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம். நிரந்தரப்பணி என்றால் தேர்வாணையம் என இருபிரிவுகளாகச் செயல்பட்டுவருகின்றது.

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவதன் நோக்கம் B.A. M.A. M.Com. M.B.A. போன்ற கலைப்படிப்புகள் படித்தவர்கள் அவர்களின் கல்வித்தகுதி மற்றும் திறனுக்கேற்ற வகையில் குரூப் I அல்லது II அல்லது III அல்லது IV என எதற்குத்தகுதி பெறுகின்றார்களோ அந்தப் பணிக்கு நியமனம் பெறுகின்றார்கள். நியமனம் கிடைக்கப் பெறாத மற்றவர்கள் ஏதோ ஒரு கிடைத்த தொழிலைச் செய்கின்றனர். மொத்தத்தில் அரசுப்பணிக்குள் செல்ல அவர்கள் தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றார்கள் B.E. முடித்த பட்டதாரிகள் அரசுப்பணிகளை தற்காலத்தில் விரும்புவது கிடையாது. பெரிய தனியார் நிறுவனங்களில் லட்சக்கனக்கான ஊதியம் பெறும் பணிகளுக்கு சென்றவர்கள்போக கூடுதல் வருவாய் கிடைக்காத, படிக்கும் போதே பணிக்கான தேர்வு கிடைக்காத (Campus selection) மற்றவர்கள் தான் அரசுப்பணியை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்புகின்றனர்.

அந்தப் பணிநியமனம் பெறுவதற்குக் கூட ‘இந்திய வாழ்நிலை விதிப்படி’ லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கவேண்டும்.

அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசுப்பணிகள் கிடைக்காதவர்கள் வேறு ஏதேனும் தொழில்கள் செய்து வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

இப்போதுள்ள புதிய சட்டத்தின்படி வழக்கறிஞருக்கு படித்துப்பட்டம் பெற்றபின் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் AIBE (ALL INDIA BAR COUNCIL EXAMINATION) என்ற பரீட்சையில் வெற்றி பெற்றால் தான் வழக்கறிஞர் அங்கி அணிந்து, நீதி மன்றத்தில் தனிவழக்கறிஞராக வக்காலத்து பதிவு செய்யமுடியும். தேர்வுபெறாதவர்கள், வழக்கறிஞராக வழக்காடவும், நீதிபதி தேர்வுகளில் தேர்வு எழுதவும் முடியாது. ஆனால் இந்த வழக்கறிஞர்கள் அனைவரும் படித்துமுடித்து பட்டம் பெற்றபின் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு பெற்றவர்கள்தான். இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறாதவர்கள் சட்டப்படி வழக்கினை எடுத்து நடத்துவதற்கு தடைசெய்யப்பட்டவர்கள். இவர்கள் 1985ம் ஆண்டுவரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்த பின்னர் B.L. or  L.L.B. எனப்படித்து வந்தனர்.

1985 ஆண்டுக்குப்பிறகு இளங்கலை, முதுகலை என ஏதும் படிக்காமல் சட்டக்கல்வியை மட்டுமே ஐந்து ஆண்டுகள் படித்துவிட்டு, வழக்கறிஞர்களாக வெளியே வருகின்றார்கள். AIBE பரீட்சையில் தேர்வு பெறாதவர்கள் யார்? அந்தந்த மாநில அரசு நடத்திய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்து, அரசு நடத்திய தேர்வுகளை முழுமையாக எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள். அந்தக் கேள்வியும் பாடமும்கூட அவற்றைக்கற்றபின் வழக்கறிஞராக தொழில் செய்ய போதுமான அறிவு இருக்கின்றதா என்பதனை உறுதிசெய்து கொள்வதற்காக வைத்த தேர்வுகள். அதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெறாதவர், அந்த குறைந்த பட்ச அறிவினைப் பெறவில்லை என்பதால் தானே மீண்டும் வகுப்பு நடத்தி பரீட்சை வைத்து தேர்வு செய்யப்படுகின்றார்கள். நீங்கள் நடத்திய ஆய்வில் போதிய அறிவு அவர்களுக்குப் புகட்டப்படவில்லையா அல்லது தேவையான அறிவினைப் பெறும் வகையில் உங்கள் பாடத்திட்டமோ அல்லது பயிற்றுவித்தலோ இல்லை என்பதனால் தான், மீண்டும் ஒரு பரீட்சை தேவைப்படுகின்றதா?இதைவிட மிகப்பெரிய அறிவுள்ள பாடம் தான் AIBEல் இருக்கின்றது என்றால், அவர்கள் கையில் வைத்திருக்கின்ற பாடத்தைப் பெற்று இவர்களின் 5ஆண்டுகாலப் படிப்பில் அதையும் பாடமாகச் சேர்த்துவிடலாமே! 5 ஆண்டு கால அவகாசம் போதாது என்றால் இன்னும் ஓராண்டைக்கூட நீட்டிக்கலாமே!முறையாகப் படித்து, தமிழ் நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற வழக்கறிஞரை நீதிமன்றத்தில் வழக்காட முடியாது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? இந்த அரசாங்கம் சட்டம் படித்த ஒருவரை திட்டமிட்டு கிரிமினலாக மாற்றுகின்றது! இதைத் தவிர, இதில் வேறு என்ன நீதி இருக்கிறது?சட்டம் படித்த மேதைகளுக்கே இப்படியான சட்டங்களை இயற்றுவது எந்தப்பக்கம் செயலிழந்த மூளை? இந்த மூளைக்குப் பெயர்தான் இந்திய மையக்குவிமுக ஆட்சி (BUREAUCRACY OF INDIA)
“இந்தியாவில் கிராமப் புறத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22.42ம், நகர் புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65க்கும் மேல் அத்தியாவாசியத் தேவைக்கு செலவு செய்ய முடிகின்றவன் ஏழை கிடையாது, அவன் வறுமைக்கோட்டிற்குக் கீழே வரமாட்டான்”என்று நீண்ட ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த
இந்தியாவின் வறண்டுபோன மூளைதான் வழக்கறிஞர் படிப்பினைக் கொச்சைப்படுத்துகின்றது.

"நான்காவதுதூண்" என்று வருணிக்கப்படும் இந்தியாவின் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துகின்ற வழக்கறிஞர்களின் எதிர்காலம் மீட்பரே இல்லாமல், இந்த ஒருமுகமைய ஆட்சிக் கோட்பாட்டாளர்களின் (Bureaucrats) கைகளில் சிறை பட்டுக்கிடக்கின்றது!

இந்திய நீதி மன்றமே! உன்னை ஆட்டிப்படைப்பது யார்? நீதியா? நீதிபதியா?

இல்லை! இந்த வறண்டுபோன IAS அதிகாரிகள் மட்டுமே!

தேர்வாணையமும் மருத்துவர்களும்

ஏறத்தாழ 1983 வரை மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தார்கள். 1974ல் நான் மருத்துவக்கல்லூரியில் சேரும்போது, படிப்பு முடிந்த பின் அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 5ஆண்டுகள் பணிபுரிவேன் என்ற உறுதிமொழிப்பத்திரம் எழுதிக்கொடுத்து விட்டுத்தான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் படித்தவர்கள், பொதுமக்கள் சேவை செய்யவேண்டும் என்றிருந்த காலம் அது.

1984க்குப் பிறகு மருத்துவம், பல் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளை அரசு மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளப் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தமிழ் நாடு தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர முடியும்!

தற்போது கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வில் வெற்றிபெற வகுப்புகள் நடத்தப்படுவது போல், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள, சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றது. மருத்துவப் படிப்புக்கு இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?

மருத்துவ பட்டதாரிகள் எவ்வாறு எந்தத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றார்கள்?

அரசு நடத்தும் +2 பள்ளிக்கல்வி தேர்வில் ஏறத்தாழ 100க்கு 95 முதல் 100 வரை மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்க மருத்துவக்கல்வி ஆணையம் தெரிவு செய்கின்றது. அரசின் இதர வழிகாட்டுதல்களின் படி அதற்கு சற்று குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்கள் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

இவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியைத் தவிர வேறு எந்த விதமான பொதுப் பாடங்களும் நடத்தப்படுவது கிடையாது. ஒரு நோயாளியை முழுமையாகப் பரிசோதித்து தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை கொடுப்பது அல்லது இதற்கான சிகிச்சைக்கு இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவப் பிரிவுக்குச் சிறப்புச் சிகிச்சைக்குச் செல்லவேண்டும் என பரிந்துரைப்பது என்ற வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். செய்முறையும், பாடப்பிரிவுகளுமாக 5 ஆண்டுகள் முடித்த பின்பு, செய்முறையை மட்டும் பயிற்றுவிக்கும் பொருட்டு ஓராண்டுகாலம் உள்ளுறை மருத்துவராக (House surgeon) பணியாற்றிவிட்டு, தமிழ்நாடு மருத்துவ, பல் மருத்துவ கவுன்சிலில் படித்துப்பட்டம் பெற்ற சான்றிதழ்களைப் பதிவு செய்து, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்கான அரசு உரிமம் பெறுகின்றார்கள். இதைத்தான் ‘அரசு பதிவுபெற்ற மருத்துவர்’ என்று அழைக்கின்றோம்.

தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறாத மருத்துவனை உங்கள் மதிப்பீடு எந்த பிரிவில் (Category) வைத்திருக்கின்றது?

மருத்துவச்சேவை செய்யத் தகுதியற்றவன் என்ற இடத்திலா? அரசு மருத்துவமனையில் சேவை செய்யத் தகுதியற்றவன் என்று உங்களால் ஒதுக்கி வைக்கப்படுகின்றவன் தனியார் மருத்துவனாக இதே தேசத்து மக்களுக்குச் சேவை செய்து வருகின்றானே? எப்படி? அவன் தகுதியில் கோளாறா? இல்லை உங்கள் தேர்வில் கோளாறா?

1983ம் ஆண்டு வரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவசேவை செய்யவிரும்புவோர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியலாம். தனியாக மருத்துவமனை வைத்து மக்கள் சேவை செய்ய விரும்புவோர் அவர்கள் விரும்பம்போல செய்யலாம் என்றிருந்த போது, நான் கேட்கும் இந்தக் கேள்விக்கே இடமில்லை, மருத்துவனின் அறிவை மேலும் ஒரு அவசியமற்ற தேர்வு வைத்து ஆய்வு செய்த அசிங்கம் அப்போது இல்லை.
கொள்ளையடிப்பதற்காகவே தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து விட்டோம் அங்கெல்லாம் தரமில்லாத கல்வி போதிக்கப்படுகின்றது. எனவே தான் நாங்கள் ஒரு தேர்வினை நடத்துகிறோம், என்று இப்படி ஒரு தேர்வினை நடத்துகின்றீர்களா? அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் திறமையை சோதிப்பதற்குத் தேவையான கல்வி வழங்கப்படவில்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? அப்படியே அங்கு தரமில்லாத கல்வி போதிக்கப்படுகின்றது என்றால் அதைத்தானே சீர்படுத்த வேண்டும்? இல்லை இப்போது மருத்துவப்பட்டதாரிகள் எண்ணிக்கை பெருகிவிட்டது. அதனால் தான் இப்படிச் செய்து கழிக்கின்றோம் என்கிறீர்களா? அப்படியென்றால் தேவைக்குமேல் எதற்காக மருத்துவர்களை உற்பத்தி (Production) செய்கின்றீர்கள்? யாருக்காக உற்பத்தி செய்கின்றீர்கள்?

அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெறாதவர்கள்

1. திறமையற்றவர்களா? அல்லது
2. இன்னமும் பயிற்றுவிக்கப்படவேண்டியவர்களா?
3. நேற்றுவரை இந்திய மருத்துவக் கல்வி பயிற்றுவித்ததை ஓர் இரவில் தொலைத்து விட்டவர்களா?

அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்ள, இந்த தேசத்தின் உயர்குடிகளும்,அயல்நாடுகளில் வாழ்பவர்களும், பணப்பெருமுதலைகளும், ஒருமுகமையஆட்சிக்கோட்பாட்டாளர்களும், இந்தியாவை வழிநடத்திச் செல்கின்ற யோக்கிய அரசியல் தலைவர்களும், அரசு மருத்துவமனைகளில் வந்து வைத்தியம் பார்த்துக்கொள்கின்றதனாலும், சகல வசதிகளும் கொண்ட மேல் மட்டத்துக்காண மருத்துவமனையாகச் செயல்படுவதால், அதி நுன்னத திறமை பெற்றவர்களையெல்லாம் பொறுக்கி எடுத்து பணிசெய்ய வைத்துக்கொண்டு, தங்களால் திறமையற்றவர்களாகத் தயார் செய்யப்பட்டவர்களைத் தகுதியற்றவர்கள், என கழிவுகளாக்கி விடுகின்றீர்களா?

நீங்கள் நடத்துகின்ற தேர்வுகள் எந்த அளவிற்கு தரம் வாய்ந்தது என்பது சென்ற சில மாதங்களா பத்திரிக்கைகளில் நாறுவது மூச்சுத்திணர வைக்கின்றது. உங்கள் தேர்வுகளின் யோக்கியதை இவ்வளவுதான். காலம் காலமாக இதைத்தான் செய்தீர்கள் இன்று மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்

அரசு நடத்துகின்ற மருத்துவக்கல்லூரியில் படித்து, சில பாடங்களில் மெடல்களும் வாங்கிய பின் அரசு மருத்துவமனையில் சேர்ந்து அங்கு வரும் ஏழைமக்களுக்கு இலவசமாக என் கல்வியை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கக்தோடு பணி செய்ய உறுதிபூண்டிருந்த என்னை, பணம் பெற்றுக்கொண்டு நாணயமற்ற வகையில் சிலரைத் தேர்வு செய்ததனால் நான் உங்களின் ‘அறிவுத்தேடல் வளையத்திற்குள்’ வர முடியாதவனாகிவிட்டேன். 10 ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துமனையில் மருத்துவரைப்பார்க்க வழியில்லாத ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றார்கள்

ஒரு நாளைக்கு ரூ.22.42ம், ரூ.28.65ம் சம்பாதிக்க முடியாதவர்கள் இந்தியாவில்  40.2 கோடி பேர்கள் இருக்கின்றார்கள் என்று திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் அலுவாலியா சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த 40.2 கோடி மக்களுக்குத்தான் நான் சேவை செய்யவிரும்புகிறேன்.
உலக நாடுகளில் எல்லாம் மருத்துவர்களைப் பணி நியமனம் செய்யும் முன்பு மருத்துவ அறிவோடு, அந்த தேசத்து மக்களின் ‘பேசும் மொழி’ தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனையாக உள்ளது. ஏனெனில் அவன் வயிற்று வலி என்று கூறும்போது மருத்துவர் நெஞ்சுவலி என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதுதான் இந்த வழக்கு மொழியினை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம்.

மருத்துவனுக்கு என்ன தேவையோ அதை அவன் முழுமையாகத் தெரிந்திருந்தால் போதும். பொது அறிவு என்ற பெயரில் “Development of Indian Economy” என்பது போன்ற கேள்விகளுக்கு அவன் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? IAS வேலைக்கு தேவையானதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதை, மருத்துவனிடம் ஆய்வு செய்வது எதனால்? IED யும் MED யும் மருத்துவனுக்கு ஏன்? எதற்கு?

அவனுக்குச் சொல்லிக்கொடுத்த பாடத்திலேயே மீண்டும் ஒரு தேர்வு தேவையில்லை என்ற போது, மக்களுக்குச் செய்ய வேண்டிய மருத்துவ சேவையை இந்தக் கேள்விகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கின்றது?

AIBE தேர்வுமுடிவுக்குப் பின,; ‘தேறாதவர்கள்’ வழக்கறிஞர்களாக வக்காலத்து தாக்கல் செய்யமுடியாது என்பது போல், நீங்கள் வைக்கும் இந்த உலகிலேயே திறமையான தேர்வில் தேர்ச்சியுறாதவர்கள், பொது மக்களுக்குச் சேவை செய்யத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்க வேண்டியது தானே!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவிரும்புகிறவர்களுக்கு அறிவாளி மருத்துவனும், அரசு மருத்துவமனையை நிராகரிக்கின்றவர்களுக்கு உங்கள் தேர்வில் தேர்ச்சிபெறாத “திறமையற்றவர்கள்” வைத்தியம் செய்து ‘கொல்லலாம்’ என்பது தான் உங்கள் தேர்வின் முடிவா?

பொது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய என் அறிவையும் திறனையும் பொதுச்சேவை மனப்பான்மையையும் யோக்கியதையற்ற உங்கள் தேர்வு நிராகரிப்பது என்ன நியாயம்?

அரசு மருத்துவமனைக்கு அறிவாளிகளைத் தேர்வு செய்து விட்டு என் போன்ற திறமையற்ற (உங்கள் கணக்கில்) மருத்துவர்களைத் தேடி வந்து சிகிச்சைக்காகக் காத்துகிடக்கின்ற நீங்கள் அறிவாளிகளா? நீங்கள் அறிவாளிகள் என்று தெரிவு செய்த மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைகளில் நீங்கள் ஒரு நாள் வைத்தியம் பார்த்துக்கொண்டதுண்டா? ஏன் செல்வது இல்லை? உங்கள் தேர்வில், உண்மையிலேயே நீங்கள் யாரை வெளியேற்றுகிறீர்கள்?

M.A படித்துவிட்டு உங்களின் TNPSC, UPSC எழுதி, மிகத்திறமையுள்ளவன் IAS ஆகின்றான் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மாடு மேய்க்கக் கூடப் போகலாம் (அந்த மாடு மேயக்கும் ஆணையத்துக்குக் கூட நீங்கள் தான் துறைச்செயலாளர், அது வேறு விசயம்)

இந்தியாவின் Bureaucrats என்ற IAS களின் தேர்வுமுறை எப்படி? +2 தேர்வில் மதிப்பெண்கள் பெறுபவர்களில், மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், விவசாயம் என எந்த தொழிநுட்பப் படிப்புக்குச் செல்வதற்கு தகுதியற்றவர்கள், வேறு வழியின்றி B.A., B .Sc., B.Com., எனக் கலைக்கல்லூரிகளில் சேர்ந்து வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்ற மெக்காலே கல்வி பாடத்திட்டத்தைப் படித்துவிட்டு பட்டம் பெறுகின்றவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்துப் தேர்வு எழுதி, தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். கல்லூரிக்குச் செல்லாமல் தொலைதொடர்பு கல்வி பயின்றால்கூட போதும் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இரவு உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்த ஒருவர் IAS ஆகத் தேர்வு பெற்றார். குரூப் II  பரீட்சை எழுதி தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்துவர்களெல்லாம் கூடப் பதவி உயர்வு பெற்று IASஆக முடியும்.

IASபெறுவதற்கு தொழில் நுட்ப மூளையெல்லாம் தேவையில்லை.

உட்கார்ந்து படித்தால் ஓடுகின்ற ஓட்டத்தில் புரோட்டா மாஸ்டர் கூட IAS ஆகலாம். அவ்வளவுதான். IAS தேர்வுபெற்றவர்கள் எல்லாம்அறிவாளிகள் அல்ல என்பதல்ல என விவாதம். தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் இன்று IAS ஆகிக் கெண்டிருக்கின்றார்கள். அது முடியும். ஆனால் BAயும், MAயும் படித்துவிட்டு IAS ஆனவர்கள் ஒருபோதும் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆக முடியாது.

மருத்துவ சேவையை மக்களுக்கானதாக எடுத்துச் செல்லும் பணியினை மருத்துவம் பயின்றவர்கள் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். நில அளவையையும், வரிவசூல் செய்வதையும், ஆடு மாடு கணக்கெடுக்கும் ‘வேலையைச் செய்கின்றவர்கள் கைகளில் ஒப்படைத்தால் மருத்துவமனை எப்படி உருப்படும்?

TNPSC தேர்வில் முறையாகக் கல்வி பயின்ற மருத்துவரை தேர்வு செய்யாத போது, அவனது பட்டத்தை திரும்பப்பெற்றுக் கொண்டு மருத்துவத் தொழில் செய்ய அனுமதி கிடையாது என்று கூற உங்கள் நிர்வாகத்திற்கு திராணியிருக்கின்றதா? வழக்கறிஞர்களுக்கு ஒரு நியாயம்? மருத்துவர்களுக்கு ஒரு நியாயமா? MBBS., MS., MD., MCH., எனப் படித்த பட்டம் பெற்ற மருத்துவனுக்கு வைத்தியம் செய்ய ஒரு தேர்வு வைக்க வேண்டும் என்ற உங்கள் IAS மூளையின் எந்தப்பக்கம் செயல் இழந்து போய் உள்ளது என்று தெரியுமா?

அரசு மருத்துமனையில் சேர்ந்து (அங்குதான் ஏழை வருகின்றான்) மருத்துவ சேவை செய்ய விரும்புகின்றவர்களை எந்தத் தேர்வும் இன்றி பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையை விரும்பாத மருத்துவ வியாபாரிகள் வேண்டுமானால் உங்களுக்குச் சேவை செய்யட்டும்.

இந்தியா இன்னமும் முன்னேற்றமடையாமல் போவதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை அய்ந்தாண்டுத் திட்டங்கள் வந்த பின்பும் இந்த தேசம் கீழ் நிலையிலேயே இருப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல, அவர்களையும் சேர்த்து இயக்கும், இந்தியாவின் சாபக்கேடான ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்கள் (Bureaucrats) என்று அழைக்கப்படும் IAS கள் தான்! இந்திய வங்கிகள் இன்னமும் வங்கித்துறை சார்ந்த வல்லுநர்கள் வசம் இருப்பதால் தான் அவைகள் லாபகரமாக இயங்குகின்றன. நும்ப IASகளுக்கு அதற்குள் இடமில்லை. தப்பித்துக்கொண்டது வங்கிகள்.

இராணுவம், மருத்துவம், பொறியியல், விவசாயம், கல்வி போன்ற உயிர்த்துடிப்பான அனைத்திலும் அந்தந்தத்துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் (Technocrats) கைகளுக்கு முழு நிர்வாக அதிகாரம் வரும்போது தான் இந்தியா வளம்பெறும். ஏனைய வளர்ந்த நாடுகளிலெல்லாம் இது போன்ற துறைகள் தொழில் நுட்ப வல்லுனர்களிடம் தான் உள்ளது.

Bureaucrats கைகளில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றது இந்தியா என்ற இந்தப் பரந்து விரிந்த தேசம்.