Sunday 11 March 2012

“ மனநிலை சரியில்லாதவர்கள் ”


“ மனநிலை சரியில்லாதவர்கள் ”

7.3.2012 நாளிட்ட திருச்சி பதிப்பில் வெளிவந்த தினமணி நாளிதழில் 4வது பக்கத்தில் வெளியான செய்தியின் சுருக்கம், “4.3.2012 ஞாயிறு இரவு திருச்சியில் அரிஸ்டோ விடுதியின் முன்புள்ள பாபாசாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு. நள்ளிரவு 12 மணியளவில் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் பரமசிவம் (40) என்பவரை கண்காணிப்புக் கேமராவில் பதிவானவற்றை வைத்து கண்டறிந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் சாலைமறியல் செய்த பிறகு காவல் துறையின் நடவடிக்கை என்றும் அச்செய்தியில் உள்ளது.

இந்த செய்தியின் சிறப்பம்சம் தான் இக்கட்டுரை எழுதத் தேவையானதாக இருக்கின்றது. செய்தியின் கடைசி வரி என்ன சொல்கின்றது?

“அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகின்றது”.

எமது மூன்று கேள்விகள்:-

1. மனநிலை சரியில்லாதவரை கண்டுபிடித்து அவரின் தலையில் இந்த வழக்கினை பதிவு செய்து, ஆத்திரத்துடன் போராடியவர்களை திருப்தி செய்யும் காவல்துறையின் வழக்கமான திசைதிருப்பல் இது எனக்கொள்ளலாமா?

2. மறியல் செய்தவர்களையும் சமாதானப்படுத்தி, திட்டமிட்டு அவமதிப்புச் செய்தவனை மனநிலை சரியில்லாதவன் எனச் சான்றளித்து, தண்டனை கொடுத்துவிடக் கூடாது என்ற காவல்துறையின் வழக்கமான தலித் எதிர்வினையா?

3. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை அவமதிப்புக்;குள்ளாக்கும் குற்றவாளிகள் மட்டுமே எல்லாக்காலத்திலும் எல்லா ஊர்களிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பதேன்? காவல்துறை ஒப்பனை செய்யும் மனநிலை பாதிக்கப்பட்வர்கள் அப்படியே இருக்கட்டும், ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலைமட்டும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட சரியாக அடையாளம் தெரிகின்றது. அந்தச் சிலையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் ஏராளமான சிலைகள் இருந்தாலும் அவைகளெல்லாம் அவமதிக்கப்படக் கூடாது என்பது மட்டும் தெளிவாகப்புரிகின்ற மன நிலையில் தான் இன்றைய சாதி இந்துக்கள் இருக்கின்றார்கள். ஊருக்குள் மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ இஸ்லாமியர்கள் தெருக்களில் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை அவமதிக்கவேண்டும் என்று இது நாள் வரை தோன்றவில்லை?

மனநிலை பாதிக்கப்பட்டவனுக்கு தன்னுடைய மதமும், தன் சாதியும், தான் தின்பது என்னவென்று மட்டும் தெரிகின்றது. அதோடு தன் சாதியின் எதிரியாரென்பதும் கூடத்தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. இது என்னடா வியாதி? இது ஒரு சமூகத்தின் வியாதியா? அல்லது தனிநபர் வியாதியா?

மன நோயாளிக்குக்கூட அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரக்கூடிய அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? உன் வயதிற்கு அவர் நிழலைக் கூடப்பார்த்திருக்க முடியாது. அவர் பேச்சுக்களை காதால் கேட்டிருக்க முடியாது அவர் எழுதிய நூல்களைத் தொட்டுக்கூடப்பார்த்திருக்க அறிவு வேண்டும். பின் ஏன் மனநிலை திரிந்த உங்களுக்கு அவர் மட்டும் அவமதிக்கப்பட வேண்டியவர் என்று புரிகின்றது?

அவர் வாழ்ந்த காலத்தில் உலகில் இருந்த ஆறு அறிஞர்களில் அவரும் ஒருவர். ஒருவேளை செத்தமாடு தூக்கவேண்டிய நபர் எதற்காக மேதையாக மாறினார் என்ற ஆற்றாமையா? இந்தச் செய்திகூட நான் இப்போது கூறிய பிறகுதான் உங்களுக்கே தெரியும்! எனவே அதற்காக நீங்கள் ‘உங்கள் தேசத்தின்’ கௌரவ மிக்க மரியாதையைச் செய்திருக்க வாய்ப்பில்லை! 

இந்தியாவில் அந்நாளில் இருந்த அனைத்து சமூக, அடிப்படைத் தொழிலாளர்களுக்கும் விடுதலை வேண்டும் என்பதற்காக ‘சுதந்திர தொழிலாளர் கட்சி’ என்ற அகில இந்திய கட்சியைத் தொடங்கி அனைத்துத் தொழிலாளர் நலனுக்காகவும் போராடினாரே! அதற்காகவா ‘உங்கள் தேசத்தின்’ கௌரவ மிக்க மரியாதையை அவருக்கு ‘மனநிலை திரிந்த நிலையிலும்’ செய்கின்றீர்கள்?

உங்களுக்கு இந்திய அரசியல் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அனைத்திந்திய தொழிலாளர்கள் நலனுக்காக அகில இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே தொழிலாளர்களையும் ஓரணியில் சேர்த்து அவர்களின் நலனுக்காகப் போராடினாரே அதற்காகத் தான் ‘உங்கள் தேசத்தின்’ உயரிய மரியாதையை அவருக்குச் செலுத்துகின்றீர்களா?

உங்களுக்கு தொழிற்சங்க வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை!

இந்த நூலகத்தில் உள்ள அதிகப்படியான நூல்களை வாசித்தவர் என்று அவரின் அறிவுத்திறனை வியந்து லண்டனில் உள்ள அருங்காட்சியக நூலகத்தின் நுழைவு வாயிலில் இவரது புகைப்படத்தை வைத்து அவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டார்களே! ஒருவேளை அந்தச் செய்தியை யாரேனும் உங்களுக்கு கூறிவிட்டார்களா? எனவேதான் “உங்கள் தேசத்தின்” பெருமைக்குரிய மரியாதையை அவ்வப்போது செலுத்துகிறீர்களா?

இதைத் தெரிந்துகொள்ள உலகஞானம் வேண்டும்! 

அகில உலக அளவில் தொழிலாளர்களுக்கென அரசியில் கட்சிகள் நடத்தும் இந்திய கம்யூனீஸ்டுகள் கூட (உலகமெல்லாம் உழைக்கும் மக்களுக்கு 8மணிநேர வேலை வேண்டும்மென்று போராடிக்கொண்டிருந்த போது) இந்தியாவில் 8மணிநேர வேலை வேண்டும் என்று போராடாத போது (பாண்டிச்சேரியில் ஆங்கிலோ பிரஞ்சு டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்கள் 8 மணிநேரம் வேலை கேட்டு நடத்திய பேரணியில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், 28-11-1945-ல் இந்தியாவில் ‘8’ மணிநேர வேலையை சட்டமாக்கித் தந்தாரே! அந்த நன்றி விசுவாசத்திற்காகவா அவருக்கு, ‘உங்கள் தேசம்’ உங்களுடைய மக்களின் புகழ்மிக்க மரியாதையைச் செலுத்துகிறீர்கள்?

இதற்கெல்லாம் கல்வி கற்றிருக்க வேண்டும்!

“இந்து சமூக அமைப்பில் பார்ப்பனனைத்தவிர, ஏனைய அனைத்துச்சாதியனரும் அவர்களுக்குச் சின்னச் சாதிதான். சத்திரியன், வைசியன் தவிர, ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் சூத்திரர்கள்தான். “சூத்திரன் என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன், வேசிமகன்கள். அவர்கள் அனைவரும் அவனுக்கு சூத்துக்கழுவிவிடுவது உட்பட அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் என்று மனுதர்மச்சட்டம் சொல்கின்றது” என்று தந்தைபெரியார் நாவறண்டுபோக ஊர் ஊராக பேசி உங்களையெல்லாம் மானமுள்ள மனிதர்களாக்கவேண்டும் என்றும் தன் உயிர் உள்ள வரை போராடினாரே! யாரையுமே தனக்குத்தலைவன் என்று கூறிக்கொள்ளாத தந்தை பெரியார் ‘டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தான் தன் தலைவர்’ என்று மாயவரம் மாநாட்டில் பறைசாற்றினாரே! அதற்காகத்தான் அவருக்கு ‘உங்கள் தேசத்தின்’ கொளரவத்தை இப்படி தெரிவிக்கிறீர்களா?

இதற்குப் பகுத்தறிவுவாதியாக இருக்கவேண்டும்.

இந்து சமூக்கட்டமைப்பில் இடைநிலைச்சாதிகள் அனைத்தும் பார்பனனுக்குத் தொண்டூழியம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, உங்கள் சமூக அவமானத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தில் உங்கள் சமூக அந்தஸ்த்து என்பது அரூவருக்கத்தக்க வகையில் இருக்கின்றது. இதை எதிர்த்து ‘நாம்’ போராட வேண்டும் என்று உங்களுக்காகக் குரல் கொடுத்த முதல் இந்தியராக இருந்தாரே! இந்துமதத்தில் உங்களின் இழிநிலை எவ்வாறு உள்ளது என்று உங்களுக்காகவே “ WHO WERE SUDRAS ” என்ற ஆராய்ச்சி நூலை, இன்றுவரை மறுக்க முடியாத ஆதாரங்களோடு ஆவணப்படுத்தினாரே அதற்காகத்தான் ‘உங்கள் தேசம்’ அடிக்கடி உங்களின் தரத்திற்கேற்ற வகையில் கௌரவப்படுத்துகிறது!

இதைக் கூட தெரிந்து கொள்ள கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும்.

உங்களுக்குக் கீழே ஒரு சாதிப்பிரிவினர் இருக்கின்றார்கள் என்ற போலியான மமதையில், தான் உயர்ந்த சாதியினர் என்று பெருமைப்பட்டுக்கொள்ள உங்களிடம் எதுவுமே இல்லை. இந்தியாவில் நீங்கள் மானமுள்ள மனிதர்களாக வாழ வேண்டும், மானத்தைவிட மனிதனுக்கு உயர்வானது ஏதும்இல்லை.அதுவும் பிறப்பின் அடிப்படையில் நீங்கள் இழிபிறவிகளாக இருக்கின்றீர்கள் என்று உங்களில் ஒருவர் கூட சிந்திக்காத போது, இந்த இழிவுகளிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்பதற்காக உங்களுக்காவே “ ANNIHILATION OF CASTE ” (சாதியை ஒழிக்கவழி) என்ற வரலாற்று நூலினை எழுதித்தந்துவிட்டுச் சென்றாரே! உங்களைக்கூட சகமானிடனாகப் அவர் பார்த்ததற்காகத்தான் ‘உங்கள் தேசம்’ அவருக்கு அவ்வப்போது நினைவு கூர்ந்து இவ்வளவு உயரிய மரியாதையைச் செய்கின்றதா?

இதற்கெல்லாம் மனிதப்பண்புகள் வேண்டும். 

அவர்செய்தனவற்றை பட்டியலிடுவதென்றால் மீண்டும் 400 பக்கத்திற்கு ஒரு நூல் எழுத வேண்டும்.

அந்நாளில், ஜனநாயகம் மலர்ந்திருந்த தேசங்கள் அனைத்திலும் உள்ள எழுதப்பட்ட அரசியல் சட்டங்களையெல்லாம் நுட்பமாகக் கற்றறிந்து அவை அனைத்தையும் தன் பேனாவில் மையாக நிரப்பிக்கொண்டு, இந்த நன்றிகெட்ட தேசத்திற்காக ஓயாது உழைத்து உடல் நலம் குன்றிய நிலையிலும் கூட ‘உங்கள் தேசத்திற்காக’ இன்றுவரை அசைக்கமுடியாத வலுவான ஒரு அரசியல் சட்டத்தை தனிமனிதனாக நின்று எழுதிக்கொடுத்தாரே! உலகமே அவரை ‘ FATHER OF INDIAN CONSTITUTION என்று வருணித்ததே! அந்த நன்றிக்காகத்தான் “உங்கள் தேசம்” இப்படியான தேசிய மாரியாதையைச் செலுத்துகிறதா?

இதற்கெல்லாம் மனித நாகரீகம் தெரிந்திருக்கவேண்டும்!

‘ MAN OF THE MILLENNIUM ’  

கொலம்பியா பல்கலைக்கழகம் தனது 250 ஆண்டுகால வரலாற்றில் தங்களுடைய பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுச் சென்ற மாணவர்கள், தங்களுடைய தேசங்களுக்கு சென்று ‘அங்கு வாழ்கின்ற மக்களுக்காக சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்’ யார் என்ற நீண்ட நெடிய ஆய்வினைச் செய்து, மொத்தம் 64 பேர்களைத் தெரிவு செய்தார்கள். அந்த 64 பேர்களில் பாபாசாகேப். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் முதலிடத்தில் இருக்கின்றார் என அறிவித்து, இவர் தான் ‘ MAN OF THE MILLENNIUM ’ என்று தங்கள் பல் கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டார்கள் மேலும் “உலகில் தோன்றிய ஆறு அறிவாளிகளில் (Six Brain) இவரும் ஒருவர். இந்தியாவில் இவர் மட்டும் தான்” என்ற ஆய்வும் நடத்தப்பட்டிருக்கின்றது.

(Ref:- 1. " UNTOUCHABLES TO DALIT "- BY ELEANOR ZELLET

2. Buddhist circle @yahoogroups.com

Cc . " Chakradhar Hadke ”

உலகமே அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் ‘உங்கள் தேசத்து’ எந்த ஊடகங்களும் வெளியிடாது. அரசியல் சமூகப்பண்பாட்டுத் தளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எந்தக்காலத்திலும் விடுதலைபெற்று விடக்கூடாது என தன் உயிரையே பணயமாக வைத்து அம்மக்களுக்கு எதிராகப் போராடியவர்களையெல்லாம் ‘உங்கள் தேசத்து’ ஊடகங்கள் பிதாமகர்களாகச் சித்தரிக்கின்றது. டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின், இந்தப் பெருமைகளையெல்லாம் உங்கள் தேசத்து மக்களுக்கு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவதால் அதையும் கடந்து நீங்கள் தெரிந்திருக்க அவசியமில்லை. எனவே அதற்காகவெல்லாம் ‘உங்கள் தேசம்’ அவ்வப்போது அவருக்கு மரியாதை செலுத்த வாய்ப்பில்லை!

நிச்சயமாக இதற்கெல்லாம் சில பண்புகூறுகள் இருக்கவேண்டும்

நீங்கள் உங்கள் தரத்தில் செலுத்தும் இந்த மரியாதை என்பது மேலே உள்ள காரணங்களாக இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

ஒருவேளை, இன்றும்கூட நம்ம ஊருக்குள்ளே பண்ணையடிப்பவனாகவும் நம்ம வீட்டில் செத்தமாட்டினை தூக்கிச் செல்பவனாகவும், நம்மவீட்டு எழவுக்கு தெருவில் நின்று தப்படிக்கிறவனாகவும், நம்ம வீட்டு நாற்றம் பிடித்த பொணத்தை எரிச்சு சாம்பலாக்குகிறவனின் மகன் இன்று டாக்டருக்கும,; என்ஜுனியருக்கும் படிச்சு நம்ம ஊர்லேயே கார்லே ஏறி வருகின்றானே, அதற்கெல்லாம் இந்த மனிதர்தானே காரணமாக இருக்கின்றார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் இந்த பள்ள, பறப்பயலுக்கும், சக்கிலிப்பயலுக்கும் செருப்பு மாலை போடமுடியாததால் இவன்களை வளர்த்துவிட்டதற்காக ‘நமது தேசத்தின்’ மரியாதையைச் செய்வோம் என்று செல்கின்றிர்களா?

இல்லை! அதெல்லாம் கூடக்கிடையாது என்றால்,

இன்றைய ‘உங்கள் தேசத்து’ அரசியல், சமூகம், பண்பாடு, வரலாறு என அனைத்தையுமே சாதியமாக நீங்கள் மாற்றிக்கொண்டுவிட்டீர்கள் , உங்கள் அரசியல், சாதி சங்கத்திற்கு ஏதாவது ஒரு தலைவன் வேண்டும், கல்யாணப் பத்திரிக்கையிலும், கல்யாண வீட்டு பேனர்களிலும், TVS 50 மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் படம் பொறித்துக்கொள்வதற்கும், காரின் பின்புறக் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளவும் ஒரு தலைவன் தேவைப்படுகின்றது. அப்படி நாம் அடையாளப்படுத்திக்கொள்ளும் தலைவன் கூட நமது தேச வரலாற்றில், நம்முன்னேற்றத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை, பெரிய படித்த மேதைகளாவும் இல்லை உலகம் போற்றும் சிந்தனையாளர்களாவும் இல்லை. எழுத்தாளர்களாகவும் இல்லை, உலக அரங்கில் கௌரவப்படுத்தப்பட்டவரும் கிடையாது. சாதனையாளரும் கிடையாது. இந்த நான்கு அல்லது அய்ந்து மாவட்டம் தாண்டிவிட்டால் நமது தேசத்தில் யாருக்கும் இவர்களைத் தெரியவில்லை, சட்டத்தை எழுதியவர்களாகவும் இல்லை. குறைந்த பட்சம் பெரிய படிப்புகள் கூடப் படித்தவர்களாகவும் இல்லை! தமிழ்நாட்டிலேயே  இன்னொரு  மூலையில் போய்க்கேட்டால் ஒருத்தருக்கும் இவர்களைத் தெரியவில்லை. நாம் உயர்ந்த சாதியாகவே இருக்கின்றோம். நமக்கெல்லாம் கிடைக்காத ஒருத்தர் இந்த நாலாந்தரச் சாதிப் பயல்களுக்குத் தலைவராகக் இருக்கின்றாரே! என்ற ஆத்திரத்தைத் தவிர வேறுஏதும் இல்லை. நம் நாகரீகத்திற்கும், கல்வியறிவுக்கும், நம்பண்பாட்டுக்கும் தெரிந்த ஒரே ஒரு உயர்ந்த மரியாதை இது தான் இதைச் செய்வோம் என்று அறுதியிட்டு விட்டதால் இதைச் செய்கின்றீர்கள்.

என்றுமே காவல்துறையினரால் கைது செய்யப்படுவர்கள் மனநிலை சரியில்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இங்கு,

‘அனைவருமே மனநிலை சரியில்லாதவர்கள்’.

பி.கு “இரண்டாம் தரக்குடிகளாக நடத்தப்படுபவர்கள் எந்த தேசத்தையும் தனது தேசம் எனக் கூறிக்கொள்ளமாட்டார்கள்” 


No comments:

Post a Comment